News

22ஆவது அரசியலமைப்புத் திருத்த மனுக்கள் மீதான விசாரணை சிக்கலானது.. நீதித்துறையின் சுதந்திரம் குறித்து காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி!

இலங்கை அரசியலமைப்பின் முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் நடைமுறை நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் (CLA) தனது தீவிர கவனத்தை செலுத்தியுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக, இந்த வழக்கு விசாரணையில் பின்பற்றப்பட்ட சில நடவடிக்கைகள் சிக்கலுக்குரியவை என அச்சங்கத்தின் தலைவர் ஸ்டீவன் திரு (Steven Thiru) வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் கடந்த செப்டம்பர் தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஸ்டீவன் திரு, இந்த வழக்கு விசாரணையை அவதானித்த பின்னர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள நிலையில், இதன் நேரடிப் பயனாளியாக பிரதம நீதியரசர் இருப்பதால் அவர் இந்த வழக்கு விசாரணையிலிருந்து விலக வேண்டும் என மனுதாரர்கள் கோரிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறித்து அறிக்கையில் பிரத்யேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய கோரிக்கையை நிராகரிக்கும் போது, அதற்கான காரணங்களை தெளிவாக முன்வைக்கத் தவறியமை நீதித்துறையின் நடுநிலைமை குறித்து பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட வழிவகுக்கும் என தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை விசாரிப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் (17 பேர்) கொண்ட முழுமையான நீதிபதிகள் குழாமை (Full Bench) நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 5 பேர் கொண்ட நீதிபதிகள் குழாம் நியமிக்கப்பட்டதும் அறிக்கையில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பிரதம நீதியரசரைத் தவிர உயர் நீதிமன்றத்தின் மிகவும் மூத்த 4 நீதிபதிகளும் இந்த நீதிபதிகள் குழாமில் சேர்க்கப்படாமை குறிப்பிடத்தக்க ஒரு விடயம் என ஸ்டீவன் திரு தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது, பிரதிவாதிகள் தமது கருத்துக்களை முன்வைத்த பின்னர் மனுதாரர்களுக்கு வாய்மொழியாக பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்படாமையும் நடைமுறை நியாயத்தை மீறும் செயலாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கலான அரசியலமைப்பு சார்ந்த விவகாரங்கள் அடங்கிய இவ்வாறான வழக்கொன்றில் எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளுக்கு மட்டும் வரம்பிட்டுக்கொள்வது போதுமானதல்ல என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது விஜயத்தின் போது ஸ்டீவன் திரு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

இருப்பினும், நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் நீதி அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கு அனுமதி கோரப்பட்ட போதிலும், அவர்களிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஜனநாயக ஆட்சியின் அடிப்படையாகும் என்றும், எந்தவொரு அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்கக்கூடிய இறுதி அரணாக நீதித்துறை விளங்குவதால் அதன் சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பேணுவது அத்தியாவசியமானது என்றும் கூறி ஸ்டீவன் திரு தனது அறிக்கையை முடித்துள்ளார்.

Recent Articles

Back to top button