திவால் நிலையிலிருந்து நாம் நாட்டை மீட்டுள்ளோம்.. ஆசியாவின் அதிவேக வளர்ச்சி எம்முடையதே.. உலகளவில் நான்காவது இடம்..
கடந்த ஆட்சிக்காலத்தில் திவாலாகியிருந்த நாட்டின் பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கம் மீண்டும் கட்டியெழுப்பியுள்ளதாகவும், தற்போது உலகளவில் மிக வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர், சர்வதேச குறியீடுகளுக்கு அமைய ஆசியாவில் மிக வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சிக்கு மேலதிகமாக, உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் குறியீட்டில் 14 நாடுகளையும், அமைதியான நாடுகளின் குறியீட்டில் 20 நாடுகளையும் கடந்து இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் கூட இலங்கை தற்போது ஒரு நடுத்தர வருமானம் பெறும் நாடாக உருவெடுத்து வருவதை ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் குறித்து கருத்து தெரிவித்த நாமல் கருணாரத்ன, எதிர்க்கட்சியின் பொருளாதார நிபுணரான கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூட அரசாங்கத்தின் பொருளாதார ஸ்திரத்தன்மையை நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளதை நினைவுகூர்ந்தார்.
“வரலாற்றில் முதன்முறையாக அரசாங்கத்தின் திறைசேரி நிரம்பி வழிவதாகவும், பேரினப் பொருளாதாரம் (Macroeconomy) ஸ்திரமடைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவே தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்யக்கூடிய அளவுக்கு பொருளாதாரம் பலமடைந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்,” என பிரதி அமைச்சர் கூறினார்.
சர்வதேச அமைப்புகளால் வழங்கப்படும் இந்தத் தரவுகளும் அறிக்கைகளும் பொய் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறாரா எனத் தான் கேள்வி எழுப்புவதாகவும், நாட்டில் ஏற்பட்டுள்ள உண்மையான பொருளாதார வளர்ச்சியை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தயங்கக் கூடாது என்றும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


