தார் வீதி அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக முடித்துக்கொடுத்து, அரசாங்கத்துக்கு 8,859,708 ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றம் – இந்த அரசின் முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடியின் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது

இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பணியாற்றியபோது, 2014 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் தார் வீதி (கார்பெட்) அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக முடித்துக்கொடுத்து, அரசாங்கத்துக்கு 8,859,708 ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு , இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
இதன்போது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் அசித அந்தோனியின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்த இலங்கை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவர் புத்திக ருவன் மடிஹேவா, 2014 ஆம் ஆண்டில் இலங்கை உர நிறுவனத்தின் ஹுனுப்பிட்டி களஞ்சிய வளாக வீதிகளைத் தார் வீதிகளாக மாற்றுவதற்காக ஏலதாரர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் கொள்முதல் செயல்முறை தொடங்கப்பட்டதாகக் கூறினார்.
அந்த நேரத்தில் பிரதிவாதியான குமார ஜெயக்கொடி குறித்த நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பணியாற்றியதாக சாட்சி குறிப்பிட்டார்.
அதன்படி, கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி இந்தத் தார் வீதி அமைக்கும் பணிக்காக டி.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன் (D.S. Construction) என்ற நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் முன்பண உத்தரவாதத்தின் அடிப்படையில் அந்நிறுவனத்துக்கு முற்பணமாக 8,859,708 ரூபா செலுத்தப்பட்டதாகவும் சாட்சி தெரிவித்தார்.
கொள்முதல் பிரிவு மற்றும் நிதிப் பிரிவு ஆகியவை உரிய கொள்முதல் நடைமுறைகளை சரியாகப் பின்பற்றியுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களைப் பரிசீலித்த பின்னரே தாம் அந்தச் செலுத்துகைக்கு ஒப்புதல் அளித்ததாக சாட்சி சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனம் தார் வீதி அமைக்கும் பணியை மேற்கொள்ளவில்லை என்பதை ஒப்புக்கொண்ட சாட்சி, அந்தப் பணிக்காகக் கொண்டு வரப்பட்ட கற்கள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் தமது நிறுவன வளாகத்திலேயே விட்டுச்செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
அதன்பின்னர், குறித்த நிறுவனம் வழங்கிய முற்பண உத்தரவாதத்தின் கீழ் 2,214,921ரூபா மட்டுமே மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சாட்சி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் சட்ட அதிகாரி ஒருவரும் சாட்சியமளித்தார். பின்னர், இந்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை ஒக்டோபர் 05ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
2014ஆம் ஆண்டில் இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக பணியாற்றியபோது, அந்நிறுவனத்தின் களஞ்சிய வளாகத்தில் தார் வீதி அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனமொன்றுக்கு சாதகமாக முடித்துக்கொடுத்து, அரசாங்கத்துக்கு 8,859,708 ரூபா இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது


