News

இரு அரச நிறுவனங்களில் சம்பளம் பெறும் கூட்டுத்தாபனத்தின் தலைவர்.. அரசின் செலவில் மனைவியுடன் கனடாக்கும் பயணம்…

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஏற்றுமதி மற்றும் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெறுகிறார்.

அரச செலவில் மனைவியுடன் கனடாவுக்கும் பயனம் …

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஏற்றுமதி மற்றும் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் (Sri Lanka Export Credit Insurance Corporation) தலைவர் இரண்டு அரச நிறுவனங்களில் சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெறுகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தீவிர குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறிப்பிட்ட கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார் எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அவர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முழுச் சம்பளம் மற்றும் ஏனைய அனைத்துக் கொடுப்பனவுகளையும் பெறுகிறார் எனத் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக, ஏற்றுமதி மற்றும் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்காக வழங்கப்படும் ஓட்டுநர் கொடுப்பனவு, மருத்துவக் கொடுப்பனவு உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒரே நேரத்தில் அனுபவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு வெளிப்படுத்தினார்.

மேலும், குறிப்பிட்ட தலைவர் அண்மையில் தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு கனடாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்காக விமானச் சீட்டுகளுக்கு மட்டும் இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டு பெருமளவிலான நிதி மோசடியைச் செய்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குற்றம் சாட்டினார்.

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன மூன்று அரை இலட்சம் ரூபா தொடர்பான விவகாரத்தில் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், இருபது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான இவ்வாறான மோசடிகள் தொடர்பாகச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வியெழுப்பினார்.

ஜனாதிபதியின் கீழ் இயங்கும் குறித்த நிறுவனத்தினுள் இடம்பெறும் இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாகக் கண்டறிந்து நியாயமான விசாரணையை நடத்துமாறு சாமர சம்பத் தசநாயக்க தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டார்.

Recent Articles

Back to top button