News

விலையை உயர்த்துமாறு கூறி தனியார் நிறுவனங்கள் டீசல் விற்பனையைக் மட்டுப்படுத்தியதை அடுத்து .. சிபெட்கோ (Ceypetco) மீது மேலதிக சுமை …

லங்கா ஐ.ஓ.சி. (LIOC), சினோபெக் (Sinopec) மற்றும் ஆர்.எம். பார்க்ஸ் (RM Parks) ஆகிய நிறுவனங்கள் டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தியுள்ளதால், நாடு முழுவதும் டீசலைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, தற்போது நாட்டில் டீசல் விநியோகம் இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்குச் (சிபெட்கோ) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி.யின் 250, சினோபெக்கின் 150 மற்றும் ஆர்.எம். பார்க்ஸின் 100 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட சுமார் 500 நிலையங்களில் டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் எரிபொருள் விலையைக் குறைத்த போது, அதற்கு அமைவாக இந்த நிறுவனங்களும் விலையைக் குறைக்க வேண்டியிருந்தது. இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுசெய்வதற்காக உரிய பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் சம்மதித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், ஒப்புக்கொண்டபடி அந்தப் பணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததால், இவ்வாறு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த குறித்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனங்கள் தொடர்ந்து டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்தினால், எதிர்காலத்தில் நாட்டில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்பட்டுள்ள விநியோகக் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம், எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தொடர்ந்து நடத்திச் செல்லக்கூடிய நியாயமான வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக, செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஓட்டோ டீசல் விநியோகத்தைக் கட்டுப்படுத்த எடுத்த தீர்மானத்தினால், போக்குவரத்து, கைத்தொழில், நகர நிர்மாணம் உள்ளிட்ட பல பொருளாதாரத் துறைகளின் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் விநியோகஸ்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக லங்கா IOC நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அந்த நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வாடிக்கையாளர்கள் வேறு விநியோகஸ்தர்களை நோக்கிச் செல்வதால், நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பிற்கு நீண்டகால ரீதியில் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், இது குறித்து உடனடி கவனம் செலுத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent Articles

Back to top button