News

நாமலை கைது செய்து, எதிர்க்கட்சியின் முக்கிய தலைவராக உருவெடுக்கச் செய்துள்ளனர்.. – கலாநிதி நிர்மால்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதானது வெறும் சட்ட நடவடிக்கைகளுக்கும் அப்பாற்பட்ட, பலமான அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றும், இதன் மூலம் அரசாங்கம் அறியாமலேயே நாமல் ராஜபக்ஷவை எதிர்க்கட்சியின் முக்கிய தலைவராக உயர்த்தியுள்ளது என்றும் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.

தனது யூடியூப் தளத்தில் அரசியல் பகுப்பாய்வு ஒன்றை முன்வைத்து அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கைதின் மூலம் அரசாங்கத்தை விடவும் எதிர்க்கட்சியின் ஏனைய குழுக்களே கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டும் கலாநிதி, சஜித் பிரேமதாச, பாடலி சம்பிக்க ரணவக, ரணில் விக்ரமசிங்க மற்றும் திலித் ஜயவீர போன்ற தலைவர்களின் அரசியல் செல்வாக்கை மறைத்து, எதிர்க்கட்சி அரசியலில் முதன்மைப் போட்டியாளராக உருவெடுக்கும் வாய்ப்பு நாமல் ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிக்குள் தற்போது ஒரு கடுமையான ‘பனிப்போர்’ உருவாகியுள்ளதாகவும், ராஜபக்ஷவினர் அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் எனக் கூறி அவர்களுக்குப் பின்னால் அணிதிரள்வதா அல்லது தனியாகச் செயல்படுவதா என்ற குழப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற கைதுகளும் சிறைவாசங்களும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு மக்களின் அனுதாபத்தையும் பிரச்சார நன்மைகளையும் பெற்றுத் தரும் “லாட்டரி சீட்டு விழுந்தது போன்ற” சூழ்நிலையை உருவாக்குவதாகக் கூறிய கலாநிதி தேவசிறி, 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் இவ்வாறானதொரு செயல்பாடே நடைபெற்றதை நினைவுகூர்ந்தார்.

இருப்பினும், இந்தச் சம்பவம் ‘மாலிம’ (தேசிய மக்கள் சக்தி) அரசாங்கத்தின் உடனடி வீழ்ச்சிக்கோ அல்லது முடிவிற்கோ வழிவகுக்கும் என்ற கருத்தை தான் நிராகரிப்பதாக அவர் வலியுறுத்துகிறார். வாக்காளர்களின் பகுத்தறிவு (Voter Rationality) குறித்து விளக்கிய அவர், அரசியல்வாதிகள் அல்லது மேல்மட்ட சட்ட வல்லுநர்கள் பேசும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அல்லது அரசியல் பழிவாங்கல்கள் குறித்த விவாதங்களின் அடிப்படையில் பொதுமக்கள் அரசாங்கத்தை மதிப்பிடுவதில்லை எனச் சுட்டிக்காட்டினார். மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாழ்க்கைச் செலவு, வருமான வழிகள், அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவையே முதன்மையாக உள்ளன என்றும், ஒரு அரசாங்கத்தின் நிலைத்தன்மையும் வீழ்ச்சியும் இந்த அடிப்படை காரணிகளிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் கூறுகிறார்.

மேலும், கடந்த மூன்று தேர்தல்களிலும் மக்கள் ‘மாலிம’வுக்கு வாக்களித்ததன் மூலம் அது வாக்காளர்களின் அரசியல் பழக்கமாக மாறியுள்ளது சுட்டிக்காட்டிய அவர், ஒரு அட்டையானது ஒரு இடத்தை விட்டகன்று மற்றொரு இடத்தை இறுக்கமாகப் பற்றிக்கொள்வது போல, தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து நம்பிக்கை வைக்கக்கூடிய பலமான, ஒருங்கிணைந்த மாற்றுச் சக்தி எதிர்க்கட்சியிலிருந்து உருவெடுக்கும் வரை வாக்காளர்கள் அரசாங்கத்தை விட்டு எளிதில் விலகமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கேற்ப, அரசாங்கத்தின் நிலைத்தன்மையோ அல்லது முடிவோ நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டது போன்ற சம்பவங்களில் தங்கியிருக்கவில்லை என்றும், மாறாக அடித்தட்டு மக்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளை அரசாங்கம் எவ்வாறு கையாள்கிறது என்பதிலேயே தங்கியுள்ளது என்றும் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Back to top button