News

எமக்கு அரசாங்க அதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளது.. முழுமையான அரசு அதிகாரம் இன்னும் கிடைக்கவில்லை..

மக்களின் வாக்களிப்பின் மூலம் அரசாங்க அதிகாரம் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் இயக்குவதற்கான முழுமையான ‘அரசு அதிகாரம்’ (State Power) இன்னும் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேகர தெரிவித்தார்.

சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இளைஞர் மாநாட்டில் உரையற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி அமைச்சர், ஜனாதிபதி பதவி, 159 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் அமைச்சரவை என்பன கிடைத்துள்ளதன் மூலம் மக்கள் ஒரே நாளில் அரசாங்க அதிகாரத்தை வழங்கிய போதிலும், அரசு அதிகாரத்தை ஒரே இரவில் பெற்றுவிட முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் அமல்படுத்தும் அனைத்துக் கொள்கைகளும் அபிவிருத்தித் திட்டங்களும் அரசு இயந்திரத்தின் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுவதால், அந்த இயந்திரத்தை தமக்குத் தேவையானவாறு மறுசீரமைத்துக் கொள்வதற்கு ஒரு இடைமாற்றுக் காலம் தேவைப்படும் என்றும், தற்போதைய அரசாங்கம் அந்த மாற்றத்தின் காலகட்டத்திலேயே பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

1971 அல்லது 1988/89 காலப்பகுதிகளைப் போன்று ஆயுதப் போராட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தால், அரசாங்க அதிகாரத்தையும் அரசு அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் கைப்பற்றியிருக்க முடியும் எனக் கூறிய அவர், எனினும் ஜனநாயக வழியில் அதிகாரத்தைப் பெறும்போது அரசு அதிகாரத்தை முழுமையாகப் பெறுவதற்குச் சிறிது காலம் எடுக்கும் எனக் குறிப்பிட்டார்.

உலக அரசியல் வரலாற்றில் இடதுசாரி அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றி ஒரு நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இதற்காகக் கற்றுக்கொள்வதற்கு கடந்த காலத்தில் வேறு முன்னுதாரணங்கள் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்தினார்.

அதற்கமைய, ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் இருந்து அரசு இயந்திரத்தை சரியான திசையை நோக்கிச் செலுத்தி நாட்டை கட்டியெழுப்பும் சவாலை வெற்றி கொள்வதே தற்போதைய ஆட்சியின் முக்கிய கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button