News

இரண்டு பில்லியன் ஊழல்; அமைச்சர் லாலுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு…

கடந்த யல போகத்தின் போது உரம் கொள்முதல் மற்றும் விநியோக செயல்முறையின் போது அரசாங்க திறைசேரிக்கு சுமார் இரண்டு பில்லியன் ரூபா (1,867 மில்லியன் ரூபா) இழப்பை ஏற்படுத்தி, பாரிய அளவிலான நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, லஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகள் தேசிய சம்மேளனத்தின் சார்பில் அதன் அழைப்பாளர் நிமல் வத்துஹேவா என்பவரால் இந்த முறைப்பாடு கையளிக்கப்பட்டது.

முறைப்பாட்டைச் சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த மார்ச் 17 ஆம் திகதி விவசாய அமைச்சு, தேசிய உரச் செயலகம் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கையில் கையிருப்பில் இருந்த 101,000 மெட்ரிக் தொன் யூரியாவை மெட்ரிக் தொன் ஒன்று 9,500 ரூபா வீதம் விவசாய அமைப்புகளுக்கு வழங்க ஏகமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அந்த உடன்பாட்டை மீறி விவசாய அமைப்புகளுக்கு 46,566 மெட்ரிக் தொன் அளவை மெட்ரிக் தொன் ஒன்றுக்கு 10,200 ரூபா என்ற அதிக விலைக்கு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய நேரிட்டதாகவும், அதுதவிர மேலும் 16,000 மெட்ரிக் தொன் அளவை அரசாங்கம் தலையிட்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்குப் பெறுவதற்காக அரசாங்க திறைசேரியிலிருந்து 1,867 மில்லியன் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த தன்னிச்சையான கொடுக்கல் வாங்கலுக்காக விவசாய அமைச்சரினால் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வத்துஹேவா, ஆரம்பத்தில் 9,250 ரூபாவிற்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட உரத்தை, இவ்வாறு பொதுமக்களின் பணத்தை வீணடித்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு பெற்றது யாருடைய தேவைக்காக என்று கேள்வி எழுப்பினார்.

நெல் உற்பத்திச் செலவு ஒரு கிலோவுக்கு 12.50 ரூபாவால் அதிகரித்து விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்காத அரசாங்கம், தனியார் உர நிறுவனங்களுக்கு இவ்வாறு பில்லியன் கணக்கில் பொதுமக்களின் பணத்தைப் பாய்ச்சுவதற்கு பின்னால் பாரிய ஊழல் உள்ளதாகவும், இது குறித்து உடனடியாகவும் நடுநிலையாகவும் விசாரணை நடத்தி பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்தார்.

Recent Articles

Back to top button