முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகளும்

முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடும் அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலும் : அடுத்த கட்ட நகர்வுகளும்!
(எழுத்து : வை.அறபாத்)
இலங்கைச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் முகவரியாகவும் அவர்களின் அரசியல் தன்னாதிக்கத்தின் குரலாகவும் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தனது வரலாற்றுச்சிறப்புமிக்க 32வது தேசிய பேராளர் மாநாட்டை இயக்கம் உதித்த காத்தான்குடி மண்ணில் எதிர்வரும் செப்டம்பர் 16ம் திகதி புதன்கிழமை நடாத்தவுள்ளது.
1981 செப்டம்பர் 21ல் காத்தான்குடியில் மர்ஹூம் அஹமத் லெப்பை சேர்மன் அவர்களின் தலைமையில் இயக்கமாகத்தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் 1986 நவம்பர் 26ல் கொழும்பு பாஷா விலா மண்டபத்தில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களால் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்ட இக்கட்சி, இயக்கமாகி 45 ஆண்டுகளையும் அரசியல் கட்சியாகி 40 ஆண்டுகளையும் பூர்த்தி செய்யும் வரலாற்று மைல்கல்லில் கால்பதித்துள்ளது.
மர்ஹூம் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த அதே வரலாற்று நாளான செப்டம்பர் 16 அன்றே, அவரின் 26வது நினைவேந்தலோடு இணைந்து இம்மாநாட்டை மீண்டும் காத்தான்குடியில் கூட்டுவது, தன் கடந்த கால வரலாற்றையும் எதிர்காலப் பாதையையும் சுயபரிசோதனை செய்து கொள்வதற்கான மிக முக்கியமானதொரு தருணமாகும்.
வரலாற்றுப் பின்னணியும் அஷ்ரஃபின் தீர்க்கதரிசனமும்
சுதந்திரத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தனக்கென ஒரு சுயசார்பான தேசிய அரசியல் முகவரியின்றி பிற கட்சிகளைச்சார்ந்திருந்த முஸ்லிம் சமூகத்தின் நிலையை மர்ஹூம் தலைவர் அஷ்ரஃப் அவர்கள்: “40 வருடங்கள் மலடாயிருந்த ஒரு தாய், பெரும் போராட்டத்திற்குப்பிறகு பெற்றெடுத்தக் குழந்தையே இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ். இக்குழந்தையை நாம் பாதுகாத்துக் கொள்ளத் தவறினால் அல்லது இழந்து விடுவோமாக இருந்தால், மீண்டுமொரு குழந்தையைப் பெற்றெடுக்க இச்சமூகத்திற்கு இன்னும் எத்தனை தசாப்தங்கள் பிடிக்குமோ!” என்று உருக்கமாக உவமிப்பார்.
அஷ்ரஃப் அவர்களின் காலத்தில் கொடூரமான யுத்தமும் வடக்கு-கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்கொண்ட வெளியேற்றங்கள், உயிரிழப்புகள் மற்றும் நில இழப்புகள் போன்ற மிக மோசமான யதார்த்தங்களும் நிலவின. அன்றைய காலகட்டத்தில், தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கு ஈடுகொடுக்கவும் ஆட்சியைப் பிடிக்கவும் தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் தலைமைத்துவத்திற்கு முஸ்லிம்களின் ஆதரவு அத்தியாவசியமாக இருந்தது.
அதனால் அஷ்ரஃபின் வீச்சுமிக்க ஆளுமையையும், முஸ்லிம்களின் சுயாதீனப்பேரம்பேசும் சக்தியையும் தேசியக்கட்சிகள் சகித்துக்கொண்டு, அரவணைத்துச் செல்ல வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் நிலவியது.
இவ்வாறாக, இலங்கை முஸ்லிம்களின் தேசிய அரசியல் எழுச்சி பெருந்தலைவர் அஷ்ரஃபின் தீர்க்கதரிசனமிக்க அரசியல் நகர்வுகளினாலும் கம்பீரமான குரலினாலும் உச்சக்கட்டத்தை எட்டியிருந்த ஒரு மிக முக்கியமான வரலாற்றுக் காலகட்டத்தில், 2000-ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று அவரின் அந்த அகால மரணம் சம்பவித்தது.
பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் உயிர் பிரிந்த அதே செப்டம்பர் 16-ஆம் திகதியில், அவரின் பேரன்பிற்குரிய இயக்கத்தின் தேசிய பேராளர் மாநாடும் அதே மண்ணில் ஒருங்கிணைவது வெறுமனே திகதிகள் ஒத்துப்போகும் தற்செயல் நிகழ்வல்ல;
மாறாக, அவர் விட்டுச்சென்ற அரசியல் அமானிதத்தை அதே உத்வேகத்துடன் கையிலேந்தி நிற்கும் ஒரு உணர்வுபூர்வமான வரலாற்றுச் சங்கமமாகும்.
சவால்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவம்
மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் மரணிப்பதற்கு முன்பே, கட்சிப்பணிகளின் அயராத நெருக்குவாரங்களுக்கு மத்தியில் ரவூப் ஹக்கீம் தனக்கு எவ்வளவு பெரிய நம்பிக்கையாகவும் பலமாகவும் இருந்தார் என்பதை உணர்த்தும் வகையில், அன்று அவர் எழுதிய ‘தலைவர் குறிப்பில்’: “முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அயராத போராட்ட வேலைகளுக்கு மத்தியில் நமக்குக் கிடைக்கும் ஆறுதல்களோ மிகவும் அரிது. அவற்றில் ஒன்று தான் நமது கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் அவர்கள்” என்று நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருந்தார்.
அஷ்ரஃபின் திடீர் மறைவைத்தொடர்ந்து, கட்சிக்குள் உருவான பாரிய அரசியல் இடைவெளியும், உட்கட்சிப் பூசல்களும், ‘இணைத்தலைமை’ போன்ற சிக்கலான சோதனைகளும் இயக்கத்தின் அஸ்திவாரத்தையே அசைத்துப்பார்த்தன.
இத்தகைய புயல் வீசிய நெருக்கடிமிக்க சூழலில் தான், தலைவரை இழந்து தவித்த இயக்கத்தின் சுமையை ஏந்தி, அனைத்து எதிர்ப்புகளையும் மிக நிதானமாக எதிர்கொண்டு ரவூப் ஹக்கீம் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இயக்கத்தின் பிளவுபடாத ஒருமைப்பாட்டைக் காத்து ஒற்றைத்தலைமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள அவர் எதிர்கொண்ட ஆரம்பகால இராஜதந்திரப்போராட்டங்கள் மிகவும் கனதியானவை.
தலைமைப் பொறுப்பேற்ற ரவூப் ஹக்கீமின் காலகட்டம், மிக மோசமான போரினதும் அதற்குப் பிந்தைய நுட்பமான அரசியல் மாற்றங்களினதும் இருவேறு சவால்களைத் தன்னுள் கொண்டதாகும். ஆரம்பத்தில் கொழுந்துவிட்டு எரிந்த போர்ச்சூழலுக்கு மத்தியிலும், 2009-இல் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து உருவான முற்றிலும் புதிய வடிவிலான நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
போர் ஓய்ந்த பின்னர் தென்னிலங்கையில் மேலெழுந்த தீவிர இனவாதப்போக்குகள், ஹலால் விவகாரம், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், அளுத்கம, திகன அசம்பாவிதங்கள் மற்றும் கொவிட் கட்டாய ஜனாஸா எரிப்பு வரை முஸ்லிம்கள் மீது ஏவப்பட்ட சித்தாந்த ரீதியான நெருக்குவாரங்கள் அனைத்தையும், எவ்வித தீவிரப்போக்கிற்கும் இடமளித்துவிடாமல் நாட்டின் அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குட்பட்டு நிதானத்துடனும் சமரசமின்றியும் கையாண்டு சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கனதியான பாத்திரத்தை அவர் திறம்பட முன்னெடுத்து வந்துள்ளார்.
சர்வதேச இராஜதந்திரமும் சட்டப்போராட்டங்களும்
முஸ்லிம்களின் தனித்துவ உரிமைகளுக்கான போராட்டத்தை பாராளுமன்ற ஜனநாயகத்திற்குள் நகர்த்தியதோடு நின்றுவிடாமல், தனது அபாரமான மும்மொழிப் புலமையைப் பயன்படுத்திச் சமூகத்தின் குரலை சர்வதேச ராஜதந்திர அரங்குகள் வரை எடுத்துச் சென்ற வீரியமிக்க ஆளுமையாக ரவூப் ஹக்கீம் திகழ்கிறார்.
முஸ்லிம்கள் மீது இனவாத நெருக்குவாரங்களும் கட்டாய ஜனாஸா எரிப்பு போன்ற மனித உரிமை மீறல்களும் ஏவப்பட்ட போதெல்லாம், ஐநா மனித உரிமைகள் பேரவை, சர்வதேசத்தூதரகங்கள் மற்றும் உலக முஸ்லிம் அமைப்புகளின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுசென்று நீதிகோரினார்.
அதேவேளை, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கப்பால், ஒட்டுமொத்த இலங்கையின் ஜனநாயகப்பாதுகாப்பு, அரசியலமைப்பு வீழ்ச்சி மற்றும் சர்வாதிகாரப் போக்குகளுக்கெதிராகத் தெருவில் இறங்கிப்போராடவும் அவர் தயங்கியதில்லை.
பாராளுமன்றத்திலும் வீதிகளிலும் இறங்கி ஜனநாயகப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய அவரின் இந்த துணிச்சல்மிக்க ஆளுமை, முஸ்லிம் காங்கிரஸை வெறும் ஒரு சிறுபான்மை அமைப்பாக மட்டுமன்றி, தேசிய ஜனநாயகப் பாதுகாப்பின் முதன்மைத் தூணாகவும் உயர்த்திக் காட்டியது.
அரசியல் களத்தில் ஒரு சிறுபான்மைத் தலைவராக மட்டுமன்றி, தேசிய மட்டத்தில் ஊழலற்ற நேர்மையான அரசியலுக்கும், சட்டத்தின் ஆட்சியைப் பேணிக் காப்பதற்கும் முன்னின்ற ஒரு முற்போக்கான தேசியத் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் தனது தடத்தைப் பதித்துள்ளார்.
அரச அதிகாரத் துஷ்பிரயோகங்கள், அரசியலமைப்பு மீறல்கள் மற்றும் பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்ட ஊழல் விவகாரங்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத்தட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் அவர் ஆற்றிய பாத்திரம் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, அண்மைய காலத்தில் நாட்டிற்குப் பாரிய நிதி இழப்பையும் இறையாண்மைப் பாதிப்பையும் ஏற்படுத்தவிருந்த சர்ச்சைக்குரிய “ஈ-விசா” (e-Visa) முறைகேட்டிற்கெதிராக, எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து ஒரு சட்டத்தரணியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உச்ச நீதிமன்றத்தை நாடி, அந்த ஊழல் ஒப்பந்தத்தை இடைநிறுத்தச்செய்து நாட்டின் பில்லியன் கணக்கிலான நிதியை மீட்டெடுத்த இராஜதந்திர நடவடிக்கை இதற்குச்சிறந்த சான்றாகும்.
பல தசாப்தகால அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற அனுபவங்களைக் கொண்டிருந்த போதிலும், எவ்வித ஊழல் கறைகளுமற்ற தூய்மையான அரசியல்வாதியாகவும், சட்டத்தின் மேலாதிக்கத்திற்கு மதிப்பளித்து நீதிமன்றங்கள் மூலம் தேசிய ரீதியிலான மாற்றங்களுக்கு வழிகோலிய சட்ட வல்லுநராகவும் அவர் நிமிர்ந்து நிற்பது, நாட்டின் தேசிய அரசியல் அரங்கில் அவருக்குரிய தனித்துவமான மரியாதையை உறுதிசெய்துள்ளது.
தலைமைத்துவச்சுமைகளும் தற்போதைய நெருக்கடிகளும்
ஒரு தேசிய இயக்கத்திற்குத் தலைமை தாங்குவது என்பது வெறும் பூமாலைகளையும் பாராட்டுக்களையும் பெறுவது மட்டுமல்ல.
மாறாக, கட்சிக்குள் எழும் அனைத்து புயல்களையும் தாங்கும் இடிதாங்கியாக நிற்பதுமாகும். தங்களின் சுய அரசியல் இலாபங்களுக்காகவும், கட்சி மாறி பதவிகளைப் பெற்றுக்கொள்ளவும் அரசுகளோடு இணைந்து கொள்ளும் சிலரின் சுயநலப் போக்குகளும், அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு கட்சியை விட்டு விலகிச்செல்லும் சவால்களும் கட்சிக்குள் அடிக்கடி உருவெடுத்த போதிலும், ரவூப் ஹக்கீம் நிதானமிக்க அரசியல் ஆளுமையால் கட்சியைச் சிதையாமல் பாதுகாத்து வந்துள்ளார்.
இங்கு தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஒருமுறை தனது கட்சிப்பொதுக்குழு உரையில் அங்கலாய்த்துப் பேசிய ஒரு வரலாற்றுச்சம்பவம் நினைவுக்கு வருகிறது:
“கட்சிக்கு நிதி திரட்டுவது முதல், கூட்டங்களை நடத்துவது, ஏச்சுப்பேச்சுக்களை வாங்குவது வரை அனைத்துப்பழிகளையும் சுமையையும் நானே சுமக்க வேண்டியிருக்கிறது” என அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிதர்சனமான நிலையைப்போலவே, இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலும் கட்சிக்கு நிதி திரட்டுவது முதல், கூட்டங்களை நடத்துவது, ஏச்சுப்பேச்சுக்களை வாங்குவது வரை ரவூப் ஹக்கீமே முன்னின்று சுமக்க வேண்டியுள்ளது.
கட்சிக்குள் யார் தவறு செய்தாலும், எந்தப்பின்னடைவு ஏற்பட்டாலும் தன் மீதே அத்தனை பழிகளையும் தாங்கிக்கொண்டு, இயக்கத்தின் இருப்புக்கும் சமூகத்தின் ஒட்டுமொத்தப் பாதுகாப்புக்கும் அரணாக நிற்கும் ஒரு தலைமையாகவே அவர் நிமிர்ந்து நிற்கிறார்.
இருப்பினும், இன்றைய அரசியல் சூழலில் தலைமைத்துவம் சந்திக்கும் சவால்கள் மிகவும் சிக்கலானவை. ஒருபுறம் சமூகப்பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பும் போது “அரசியல் செய்கிறார்கள்” என்றும், மறுபுறம் இராஜதந்திர ரீதியாக நிதானத்தைக் கடைப்பிடிக்கும் போது “ஏன் அமைதியாக இருக்கிறார்” என்றும் இருமுனை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரசியல் ஆதாயங்களுக்காகத் தலைமையின் நடவடிக்கைகளைத் தவறாகச் சித்தரிக்கும் எதிரணிகளின் பிரசாரங்களும், குறுகிய நோக்கம் கொண்ட சக முஸ்லிம் அரசியல் தரப்புகளின் நகர்வுகளும் சமூகத்தின் பேரம் பேசும் சக்தியைப் பலவீனப்படுத்தவே முயல்கின்றன.
இத்தகைய நெருக்கடிமிக்க சூழலில், அனைத்து ஏச்சுப் பேச்சுக்களையும் பழிகளையும் தன்மீது தாங்கிக்கொண்டு தேசிய இயக்கத்தைப் பாதுகாக்கும் தலைமையின் பாத்திரம் மிகவும் கனதியானது என்பதைச் சமூகம் உணர வேண்டியுள்ளது.
32வது மாநாடும் இளையோர் எதிர்காலமும்
இவ்வாறானதொரு பின்னணியில், காத்தான்குடியில் நடைபெறவுள்ள 32வது பேராளர் மாநாடு என்பது வெறும் வழக்கமான தீர்மானங்களை நிறைவேற்றும் அரசியல் கூட்டமாக மட்டும் அமைந்து விடக்கூடாது.
இன்றைய இளைய தலைமுறையினர் அரசியலின் ஆழமான யதார்த்தங்களையும், இலங்கை அரசியலின் வரலாற்று நுணுக்கங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், சமூக வலைதளங்களில் மேலெழுந்தவாரியாக முன்வைக்கப்படும் கவர்ச்சி வாதங்களினாலும் தேவையற்ற விமர்சனங்களினாலும் ஈர்க்கப்பட்டு ஒருவித அரசியல் மோகத்திற்குள் தள்ளப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.
உண்மைத் தன்மையை உணராமல், ஆழந்தெரியாமல் அவசரப்பட்டு இளைஞர்கள் எடுக்கும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், ஒரு நீண்ட அரசியல் பயணத்தைக் கொண்ட கட்சிக்கும், ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்காலத்திற்கும் பாரிய ஆபத்தாக முடிந்து விடக்கூடாது.
பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எச்சரித்தது போல், 40 ஆண்டுகள் மலடாயிருந்து பெரும் போராட்டத்திற்குப்பின் பெற்றெடுத்த இந்த அரசியல் முகவரியை, இளையோர் தங்கள் அறியாமையினாலும் அவசரப்போக்கினாலும் இழக்க நேரிட்டால், அதன்பின் அழுது புலம்புவதிலோ வருந்துவதிலோ எந்தப்பயனும் இல்லை.
ஏனெனில், இழந்த பிறகு மீண்டுமொரு தேசிய முகவரியைப் பெற்றெடுப்பது என்பது இச்சமூகத்திற்குச் சாத்தியமற்ற ஒன்றாகவே மாறி விடும்.
எனவே, வெறும் உணர்ச்சிப் பெருக்குக்கு பலியாகாமல், இளைஞர்களுக்குச் சரியான அரசியல் விழிப்புணர்வையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டிய தார்மீகப்பொறுப்பு தாய் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸுக்கு உண்டு.
இளைஞர்களின் எழுச்சியையும் ஆற்றலையும் சரியான திசையில் திருப்பி, ‘Gen-Z’ தலைமுறையை முடிவெடுக்கும் முக்கிய இடங்களிலும், கட்சியின் முக்கிய பொறுப்புகளிலும் உள்வாங்கி, கட்சியின் எதிர்காலத்தையும் சமூகத்தின் பாதுகாப்பையும் தொலைநோக்கோடு கட்டியெழுப்புவதே இந்த 32வது பேராளர் மாநாட்டின் வரலாற்றுச்சிறப்புமிக்க கடமையாகவும், அஷ்ரஃபின் 26வது நினைவேந்தலுக்குச் செய்யும் உண்மையான நன்றிக்கடனாகவும் அமைய முடியும்.



