News

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் கட்டுப்போடும் துணி (Bandage) இல்லை.. பாமசிகளில் வாங்கி வருமாறு நோயாளர்களுக்கு அறிவிப்பு..

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முன்னணி வைத்தியசாலைகளில் கிராப் பாண்டேஜ் (Crepe bandage) உள்ளிட்ட அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய அறுவை சிகிச்சை உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் பற்றிய மருத்துவர்களின் தொழற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மருத்துவ விநியோகப் பிரிவினால் (MSU) அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளர்களுக்குத் தேவையான உபகரணங்களைக் கொள்வனவு செய்யும் பொறிமுறையில் ஏற்படும் தாமதம் காரணமாக, உள்ளூர் கொள்வனவுகளின் கீழ் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மருந்தகங்களில் இருந்து குறித்த பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள போதிலும், சில பிராந்திய வைத்தியசாலைகளில் அந்த முறைமை சரிவர நடைமுறைப்படுத்தப்படாததால் நோயாளர்கள் இவ்வாறான உபகரணத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முன்னணி வைத்தியசாலைகளிலும் இந்நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், குறிப்பாகக் காயங்களுக்கு மருந்திடுதல், அறுவை சிகிச்சைகளின் பின்னர் காயங்களை மூடுதல் மற்றும் எலும்பு அறுவை சிகிச்சைகளின் பின்னர் காயங்களுக்குத் தேவையான ஆதாரமாகப் பயன்படுத்தப்படும் பாண்டேஜ் வகைகளின் தட்டுப்பாடு காரணமாக, அந்த பாண்டேஜ் வகைகளை வெளியிலிருந்து வாங்கித் தருமாறு வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்கள் நோயாளர்களுக்கு அறிவுறுத்துவதாகவும் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ வெளிப்படுத்தியுள்ளார்.

சில நோயாளர்களைப் பராமரிக்க எவரும் இல்லாத பின்னணியில், இவ்வாறானதொரு சூழ்நிலையில் குறித்த நோயாளர்களுக்குத் தேவையான அறுவை சிகிச்சை உபகரணங்களை வெளி மருந்தகங்களில் இருந்து கூடப் பெற்றுக்கொள்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும், இதனால் குறிப்பாகக் குறைந்த வருமானம் பெறும் நோயாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

மேலும், 2027 ஆம் ஆண்டுக்கான மருத்துவ விநியோகக் கொள்முதல் பொறிமுறை தற்போது முடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாகக் கடந்த காலத்தில் நிலவிய தீவிர மருந்து மற்றும் அறுவை சிகிச்சை உபகரணத் தட்டுப்பாடு எதிர்வரும் ஆண்டிலும் மீண்டும் உருவெடுக்கும் அபாயம் உள்ளதால், இது குறித்து உடனடியாகக் கவனம் செலுத்துமாறு அவர் சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Back to top button