News

முஸ்லிம் சமூகத்திற்கு நூற்றாண்டு காலமாக இருந்து வந்த அமைச்சரவை பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டமை கவலையளிக்கிறது – சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா



நூற்றாண்டு காலமாக இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த அமைச்சரவை பிரதிநிதித்துவம் தற்போதைய அமைச்சரவையில் இல்லாதிருப்பது மிகுந்த கவலையளிக்கும் விடயமாகும் அதன் தாக்கத்தை தற்போது உணரக்கூடியதாக இருக்கின்றது என சமூக நீதிக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இர்பான் பன்னா தெரிவித்தார்.

“இழந்து போன அரசியல் மறுமலர்ச்சியை மீண்டும் உருவாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மருதமுனை மாநாட்டில் உரையாற்றிய அவர், அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, இலங்கை கிரிக்கெட் அணியில் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இனத்தவருக்கும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதை நினைவுபடுத்தினார்.

அனைத்து சமூகங்களையும் அரவணைக்கும் அந்தக் கொள்கையை வரவேற்கின்றோம். எனினும், தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம்கூட வழங்கப்படாதிருப்பது நமது சமூகத்தில் பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் தெரிவுசெய்யப்பட்ட சட்டவாகச் சபை உறுப்பினரான சேர் முகமது மாக்கான் மாக்கார் அவர்கள் 1931 ஆம் ஆண்டு மட்டக்களப்பு தெற்கு தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டார் இதன் மூலம் அவர் இலங்கை வரலாற்றில் முதலாவது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சராக   பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பினையும் பெற்றார் என்பதை நினைவுகூர்ந்த அவர், அந்த வரலாற்று வெற்றியை உருவாக்குவதில் மருதமுனை மண்ணும், குறிப்பாக மருதமுனையைச் சேர்ந்த ஐதுரூஸ் மௌலானா பாகவி அவர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்ததாகச் சுட்டிக்காட்டினார்.

மருதமுனை மக்கள் நீண்ட காலமாக முஸ்லிம் அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி வந்துள்ளனர், 1956  ஆம் ஆண்டு செனட்டர் மசூர் மவுலானா அவர்கள் தனிச் சிங்கள சட்டத்தினை எதிர்த்து நடந்த காலி முகத்துடன் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தற்போது இலங்கை முஸ்லிம் அரசியலில் புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் சமூக நீதிக் கட்சி உருவாக்கி வருவதாகவும், புதிய தலைமுறை அரசியல் தலைமைத்துவத்தை உருவாக்கும் கட்டமைப்பை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதற்கான ஆரம்பப் புள்ளியாக மருதமுனை மாநாடு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மருதமுனை மக்களும், இளைஞர்களும், பெண்களும் சமூக நீதிக் கட்சியுடன் கைகோர்த்து புதிய அரசியல் மறுமலர்ச்சியை உருவாக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

சமூக நீதிக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாடு நேற்று மருதமுனை கலாசார மண்டபத்தில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button