8 லட்சம் அமெரிக்க டாலரை நாமல் ராஜபக்ஷவிடம் வழங்கியதாக நிமல் பெரேரா சத்தியக்கடதாசி மூலம் உறுதி செய்தார் இதனை பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்க டொலர் 8 லட்சத்தை அன்றைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக தொழிலதிபர் நிமல் பெரேரா வாக்குமூலத்திலும் சத்தியக்கடதாசியிலும் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டுக்கள் குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (16) அழைக்கப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த விடயங்களைச் சமர்ப்பித்தார்.
எயார்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பெறப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சிங்கப்பூரில் உள்ள ‘BIZ Solutions’ நிறுவனத்தின் கணக்கிற்கு வந்துள்ளதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்தொகையில் மேலும் 8 லட்சம் அமெரிக்க டொலர்கள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நிமல் பெரேராவுக்குச் சொந்தமான ‘Sabre Vision’ நிறுவனத்தின் கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், பின்னர் அதற்கு இணையான அன்றைய பெறுமதியான ரூ. 100 மில்லியனை நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கியதாக நிமல் பெரேரா தெரிவித்துள்ளதாகவும் ஜனக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் ஆஸ்திரேலியா சென்று நிமல் பெரேராவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும், அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் சத்தியக்கடதாசி வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த விசாரணைக்காக அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின் விசாரணை நிறுவனங்களின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
எயார்பஸ் நிறுவன அதிகாரிகள் இலங்கை வந்து வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், தடயவியல் தணிக்கை அறிக்கைகளும் விசாரணைப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
அவ்வறிக்கைகளில் உள்ள மின்னஞ்சல் செய்திகளை பரிசீலித்ததில், நாமல் ராஜபக்ஷவுக்கும் எயார்பஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகள் தெளிவாக வெளிப்படுவதாக பிரதி සොலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், நிமல் பெரேராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே பணம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், அதனை உறுதிப்படுத்த போதிய பௌதிக சான்றுகள் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
நாமல் ராஜபக்ஷ இந்த வழக்கில் நான்காவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் லஞ்சம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.



