சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” தாயார் கண்ணீர் கோரிக்கை!

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” தாயார் கண்ணீர் கோரிக்கை!
இராஜதந்திர மட்டத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள்
பாறுக் ஷிஹான்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக ஊடகத்திலிருந்து நீக்கியதுடன், அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருந்தார்.
மேன்முறையீட்டில் அதிகரித்த தண்டனை
இவ் வழக்கின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, நீதிமன்றத்தினால் 5 வருட சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டு விசாரணைகளின் போது இத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவரது தாயார், “எனது மகன் தெரியாமல் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறோம். அவனை மன்னித்து, உயிருடன் மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அழுது புலம்பியவாறு வேண்டுகோள் விடுத்தார்.
இளைஞர் அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இலங்கை அரசாங்கம் சவூதி அதிகாரிகளுடன் அவசரமாக உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் பிரதேச சமூக தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



