News

சவூதியில் கேள்விக்குறியாகியுள்ள இலங்கை பிரஜை அனோஜனின் உயிர் – சாணக்கியன் எம்.பியின் கேள்வி

சவூதி அரேபியாவில் சிவராசா அனோஜன் தாக்கல் செய்த மேல்முறையீட்டின் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களைத் தொடர்ந்து, அடுத்த வாரம் இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பத் திட்டமிட்டுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் சாணக்கியன் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அந்த அறிக்கையில்,”முன்னதாக அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 இலட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேல்முறையீட்டின் பின்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சு பதிலளிக்க வேண்டிய பல முக்கியமான கேள்விகள் உள்ளன.



மேல்முறையீட்டில் வெற்றி பெறுவதற்கான அல்லது தண்டனையை குறைப்பதற்கான வாய்ப்புகள் “மிகவும் குறைவு” என தூதரகத்தின் சொந்த சட்ட ஆலோசனையில் மதிப்பிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், குடும்பத்தினரின் கூற்றுப்படி, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்த பின்னரும், அவர்களுக்குக் வழங்கப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, அவர்கள் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.



இதனைத் தொடர்ந்து, சட்டக் கட்டணமாகக் கோரப்பட்ட ரூ.1,890,766 தொகையை வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் பெயருடன் அடையாளப்படுத்தப்பட்ட வங்கிக் கணக்கில் குடும்பத்தினர் செலுத்தியுள்ளனர்.



ஆவணங்களின்படி, மேல்முறையீடு 2026 ஓகஸ்ட் 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தினர் அதனை முன்னதாகவே கோரியிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்த மேல்முறையீட்டு ஆவணத்தை குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்த அமைச்சின் கடிதம் 2026 செப்டம்பர் 16ஆம் திகதியிடப்பட்டதாக உள்ளது.



மேல்முறையீட்டு ஆவணத்தில் சட்டத்தரணி Adlan Abdullah Al-Subaie வழக்கறிஞராக குறிப்பிடப்பட்டுள்ளார். எனினும், குடும்பத்தினரின் கூற்றுப்படி, நீதிமன்றத்தில் உண்மையில் முன்னிலையானவர் வேறு ஒரு சட்டத்தரணியாவார். அந்த சட்டத்தரணியின் பெயர் அல்லது தொடர்பு விபரங்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.



வெளிவிவகார அமைச்சின் ஆலோசனையைத் தொடர்ந்து குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து, அமைச்சினால் கோரப்பட்ட சட்டக் கட்டணத்தையும் செலுத்திய பின்னர், முறையான சட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கும் குடும்பத்தினருக்குத் தேவையான தகவல்களைத் தொடர்ந்து வழங்குவதற்கும் அமைச்சு ஏற்றுக்கொண்ட பொறுப்பு என்ன?



உண்மையில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணியைத் தேர்ந்தெடுத்து, அவருக்கு வழக்கை ஒப்படைத்தது யார்? செலுத்தப்பட்ட பணம் எவ்வாறு வழங்கப்பட்டது? மேல்முறையீட்டு ஆவணம் உரிய நேரத்தில் குடும்பத்தினருக்கு ஏன் வழங்கப்படவில்லை?



இந்தச் சூழ்நிலைகள், இந்த வழக்கை தூதரக மற்றும் கொன்சியூலர் மட்டங்களில் கையாள்வதில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற தீவிரமான கேள்விகளை எழுப்புகின்றன. இதற்கான பதில்களை பாராளுமன்றத்தில் கோரவுள்ளேன்.



எனினும், பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகள் உடனடி முன்னுரிமையைத் தாமதப்படுத்தக் கூடாது.



அரசாங்கம் உடனடியாக அனுபவமிக்க சுயாதீன சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்து, மீதமுள்ள அனைத்து சட்டரீதியான நிவாரணங்களையும் கருணை மனு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அத்துடன், சவூதி அரேபியாவில் உரிய உயர்மட்டத்தில் இராஜதந்திர ரீதியான தலையீடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.



இலங்கைப் பிரஜை ஒருவரின் உயிர் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.



சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சட்டரீதியான, கொன்சியூலர், இராஜதந்திர மற்றும் மனிதாபிமான வழிமுறைகளும் இப்போது பயன்படுத்தப்பட வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button