ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் என்னை அவதூறாக தொடர்புபடுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் ; றிசாட் பதியூத்தீன்

(எம்.ஜே.எம்.சஜீத்)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியூத்தீன், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துடன் தன்னை தொடர்புபடுத்தி அவதூறான கருத்துகளையும் செய்திகளையும் வெளியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தன்னை ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி, இனவாத மற்றும் மதவாத சாயல்களை ஏற்படுத்தும் வகையில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தம்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு மாதங்கள் சிறையில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் றிசாட் பதியூத்தீன் தெரிவித்தார்.
தம்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக 100 கோடி ரூபா நட்டஈடு கோரி மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான ‘தம்பியண்ணன்’ என குறிப்பிடப்படும் நபரால் தம்மை இலக்காகக் கொண்டு அவதூறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு சில தமிழ் ஊடகங்கள் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இவ்வாறான செயற்பாடுகள் தொடருமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் தம்மையும் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துடன் தொடர்புபடுத்தும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும் றிசாட் பதியூத்தீன் கூறினார்.
தம்மையும் தமது சகோதரரையும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் காலத்தில், அப்போதைய அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஊடாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தனது ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
“ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி எம்மீது வீண் பழி சுமத்தக் கூடாது. உண்மைகள் உரிய முறையில் வெளிக்கொணரப்பட வேண்டும். எம்மீது அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் அதற்கான சட்டரீதியான பொறுப்பை ஏற்க வேண்டிய நிலை ஏற்படும்” எனவும் றிசாட் பதியூத்தீன் தெரிவித்தார்.



