News

பொருளாதாரம் வீழ்ச்சியடைகிறது.. உடனடியாக சீர்திருத்தங்கள் தேவை.. – தனநாத்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் மீண்டும் ஒரு மந்தநிலையை அடைந்துள்ளதாகவும், தற்போதைய பொருளாதாரம் இன்னும் 2018 ஆம் ஆண்டில் இருந்த மட்டத்தைக் கூட எட்டவில்லை என்றும் அட்வோகாடா (Advocata) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொருளாதார பகுப்பாய்வாளருமான தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகளை பகுப்பாய்வு செய்து அவர் சுட்டிக்காட்டுகையில், ஆண்டின் முதல் காலாண்டில் 5.1 சதவீதமாகப் பதிவாகியிருந்த பொருளாதார வளர்ச்சி வீதம், இரண்டாவது காலாண்டாகும்போது 4.2 சதவீதம் வரை கிட்டத்தட்ட ஒரு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.

பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வந்தபோதிலும், வளர்ச்சி அடையும் வேகம் மந்தமடைவது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதொரு போக்கல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.

குறிப்பாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இரண்டாவது காலாண்டில் பதிவாகிய GDP மதிப்பு (சுமார் 3,029.8 பில்லியன் ரூபாய்), 2018 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்த GDP மதிப்பை விட (3,121.5 பில்லியன் ரூபாய்) இன்னும் 2 சதவீதம் வரை குறைந்த மட்டத்திலேயே உள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் உள்ள மக்களின் வாழ்வாதார மட்டம் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பின்னோக்கிச் சென்றுள்ளதையே இது காட்டுகிறது.

இரண்டாவது காலாண்டின் பொருளாதார வளர்ச்சியைத் துறைவாரியாக ஆராயும்போது, விவசாயத் துறை 2.3 சதவீதத்தால் சுருக்கமடைந்துள்ளதுடன், நெல் உற்பத்தி 15.1 சதவீதத்தாலும் கனிம எண்ணெய் சார்ந்த உற்பத்திகள் கிட்டத்தட்ட 15 சதவீதத்தாலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. தொழில்துறை 7.3 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது, இதற்கு முக்கிய காரணம் கட்டிடக் கட்டுமானத் துறை (13.9%) மற்றும் சுரங்கம் மற்றும் அகழ்வாராய்ச்சித் துறை (17.4%) அடைந்த வளர்ச்சியாகும். சேவைத் துறை 2.7 சதவீத சாதாரண வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி வீதம் மந்தமடைவது சாதாரண மக்களின் வருமான வழிகள் மற்றும் சம்பள உயர்வை நேரடியாகப் பாதிக்கும் என்று சுட்டிக்காட்டும் தனநாத் பெர்னாண்டோ, இதன் மூலம் வறுமை அதிகரிப்பதற்கும், கடன் மறுசீரமைப்புக்குப் பின்னர் நாடு மீண்டும் கடன் நெருக்கடியை எதிர்கொள்வதற்குமான ஆபத்து அதிகமிருப்பதாக எச்சரிக்கிறார். மேலும், சர்வதேச கடன் தரவரிசையில் இலங்கை உயர்வதற்கும் இது தடையாக அமையும்.

நாடு எதிர்கொண்டுள்ள இந்த ஆபத்திலிருந்து மீள வேண்டுமானால், நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 6 முதல் 7 சதவீதம் வரையிலான மட்டத்தில் பேண வேண்டும் என்றும், அதற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அப்பாற்பட்ட பரந்த பொருளாதார சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். குறிப்பாக நிலச் சீர்திருத்தங்கள், தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் மற்றும் அரச துறையின் திறனை அதிகரிக்கும் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தாவிட்டால், நாடு மேலும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டி ஏற்படும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Recent Articles

Back to top button