News

அனோஜனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக நமது தூதரகம் மேல்முறையீடு செய்தபோது அது மரண தண்டனையாக மாறியது – வெளியுறவு அமைச்சர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜன் என்ற இலங்கை இளைஞருக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரசரிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் வரை பாதயாத்திரையாகச் சென்ற யாத்திரீகர் குழுவில் இருந்த நாயொன்றை கல்முனைப் பகுதியில் வைத்து நபர் ஒருவர் தாக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அனோஜன் இஸ்லாமிய மார்க்கத்தை நிந்தனை செய்யும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டமையே இச்சம்பவ பின்னணியாகும். அந்த வீடியோவின் மூலம் மதநிந்தனை செய்ததாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினடிப்படையில் சவூதி பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர், அந்நாட்டு நீதிமன்றத்தால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.

அந்தத் தண்டனையைக் குறைப்பதற்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சும் அங்குள்ள தூதரகமும் தலையிட்டு, சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி மேல்முறையீடு ஒன்றைத் தாக்கல் செய்தன.

எனினும், மேல்முறையீடு செய்யப்பட்டதன் பின்னர் நிலைமை எதிர்பார்த்ததை விடவும் மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர்,

“நமது தூதரகம் தலையிட்டு, மேல்முறையீடு செய்து, சட்டத்தரணிகளைத் தொடர்பு கொண்டு அந்த தண்டனையைக் குறைப்பதற்குப் பெரும் முயற்சி எடுத்தது; இன்னமும் எடுத்து வருகின்றது. ஆனால் தற்போது நிலைமை அதைவிடவும் அபாயகரமான கட்டத்திற்கு வந்துள்ளது. அந்தத் தண்டனை குறைவதற்குப் பதிலாக, மேலும் கடுமையாக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை வழங்க நீதிமன்றம் ஆயத்தமாகி வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.”

இந்த அபாயகரமான சூழ்நிலையில், இளைஞனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர மட்டத்திலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் தலையீட்டினாலும் சவூதி அரசாங்கத்துடன் கலந்துரையாடி சாதகமான தீர்வை எட்ட அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் வலியுறுத்துகிறது.

Recent Articles

Back to top button