News

சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்தது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேக்கு தொடர்பிருப்பதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.


குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உரைகளை நாடாளுமன்றத்திற்குள்ளேயே ஆற்றியுள்ளதால், அவர்களுக்கு நாடாளுமன்ற சிறப்புரிமைப் பாதுகாப்பு கிடைக்கிறது.

இதற்கமைய, அவர்களின் முழுமையான விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் பேரில் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே அவர்களிடம் வாக்குமூலங்களைப் பெற முடியும்.


இது தொடர்பாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிடுகையில், இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தங்களது கூற்றுக்களை உறுதிப்படுத்துவதற்கான நம்பகமான தகவல்கள் இருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நம்புவதால், அவர்களிடம் வாக்குமூலம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, அந்தக் கூற்றுக்களுக்கு அடிப்படையாக அமைந்த ஆதாரங்கள் எவை என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்கப்படவுள்ளது.


குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளின் ஹன்சாட் அறிக்கைகளின் பிரதிகளைப் பெற்று, அவற்றை பகுப்பாய்வு செய்த பின்னரே வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.


தங்களிடம் உள்ள எந்தவொரு தகவலையும் வழங்கி இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், இந்த வாக்குமூலங்களைப் பெறுவது முற்றாகச் சுயவிருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே இடம்பெறும் என்பதையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும்.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலே, தற்போது 100 நாட்களுக்கு அருகில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது சுகாதார நிலைக்கு ஏற்ப மேலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது அவசியமா என்பதைக் காட்டும் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றத் தவறியமை தொடர்பாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரை செப்டம்பர் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதிவான் பசான் அமரசேன உத்தரவிட்டார்.

மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் முன்வைத்த கோரிக்கையைக் பரிசீலித்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button