சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனோஜனை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது நலன் குறித்து விசாரித்த சஜித் – விடுதலையைப் பெற்றுத்தர அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக தெரிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படும் இலங்கைச் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அனோஜனின் நிலைமை குறித்தும் அவரை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடவே அவரது தந்தை தம்பிராஜா சிவராசா, தாய் இராசமாணிக்கம் யோகாலக்ஷ்மி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சினன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அனோஜனின் வழக்கு நிலைமை மற்றும் அவரை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், சவூதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனோஜனையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது நலன் குறித்து விசாரித்தார்.
அதனைத் தொடர்ந்து, அனோஜனை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்துத் தகவல்களைப் பெற, இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளருடனும் பிரேமதாச உரையாடினார்.
இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனோஜனின் விடுதலையைப் பெற்றுத்தர சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் அவரது குடும்பத்தினருக்கு உறுதியளித்தார்.
அனோஜனின் வழக்கை தாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு முன்னர் உறுதிப்படுத்தியிருந்தது.
எனினும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை அமைச்சு இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.



