News

உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் சுமார் 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்து சிக்கியுள்ள அரச ஊழியர்கள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடி தொடர்பான விசாரணையில், அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பு சுமார் 30 மில்லியன் ரூபாவை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தத் தொகை உறுதிப்படுத்தப்பட்டால், இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு மோசடிகளில் மிகப்பெரியதாக இது அமையக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெறுவதற்காக, உயிரிழந்த வயோதிபர்களின் தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



நோர்வூட் மற்றும் தலவாக்கலை பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய இந்த மோசடி தொடர்பில் இதுவரை 20 அரச ஊழியர்கள் சந்தேகத்தின் பேரில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனால் சுமார் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோர்வூட் பிரதேச செயலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மோசடியில் சுமார் 30 மில்லியன் ரூபாவும் தலவாக்கலை பிரதேச செயலகத்துடன் தொடர்புடைய சம்பவத்தில் சுமார் 02 மில்லியன் ரூபாவும் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.



நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வுப் பிரிவு, நோர்வூட் சம்பவம் தொடர்பில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. எனினும், இதுவரை இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.



தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, நோர்வூட் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 18 அரச ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நான்கு ஊழியர்களும் ஆறு ஆசிரியர்களும் அடங்குகின்றனர்.



மேலும், இரண்டு பெண் அரச ஊழியர்கள் அரச சொத்துச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, 50 நாட்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button