21, 24, 41 மற்றும் 45 வயதுடைய நால்வர் பணத்துக்காக படுத்திய பாடு..

அத்துருகிரிய, கொடகம வீதி மற்றும் ஹபரகட, மலவியகந்த வீதி பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற இரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், “கொஸ்மல்லி” என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் திட்டத்துக்கு அமைய நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் உதவியதாகவும், உடந்தையாக செயற்பட்டதாகவும் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21, 24, 41 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபரிடமிருந்து வெடிக்காத கையெறி குண்டொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 17ஆம் திகதி ஹபரகட கசுன் என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் மைத்துனரின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபோது, கையெறி குண்டுத் தாக்குதலையும் மேற்கொள்ளத் தயாராக இருந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், துப்பாக்கிச்சூட்டுக்குப் பின்னர் கையெறி குண்டை வீச முடியாத நிலையில், அதனை அருகிலுள்ள பாழடைந்த வீடொன்றில் மரத்தின் அடியில் மறைத்து வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹொரணை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கொன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரே துப்பாக்கிச்சூடு நடத்தியவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் 17ஆம் திகதி ஹபரகட கசுனின் மைத்துனரின் வீட்டில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்திருந்தார்.
அதேபோன்று, இந்த மாதம் 8ஆம் திகதி ஹபரகட கசுனுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் உணவகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவர் காயமடைந்திருந்தார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



