தங்க நகைகள் அடகு வைப்பது சாதனை அளவை எட்டியது: ஐந்து மாதங்களில் 15,000 கோடி ரூபாய்க்கு நகை அடகு வைக்கப்பட்டது!
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்து மக்கள் 14,970 கோடி ரூபாய் (ரூ. 149.7 பில்லியன்) கடன் பெற்றுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இது அடகுக் கடன் மீதியில் 16.12% வளர்ச்சியாகும். இதன்படி, மே மாத இறுதியாகும் போது வணிக வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துப் பெறப்பட்ட மொத்தக் கடன் மீதி 107,900 கோடி ரூபாயைக் (ரூ. 1.079 டிரில்லியன்) கடந்துள்ளது.
கடந்த ஆண்டின் மே மாதம் முதல் இந்த ஆண்டின் மே மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், மக்கள் வணிக வங்கிகளிடம் இருந்து 37,180 கோடி ரூபாய் அடகுக் கடன்களைப் பெற்றுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடும்போது 52.6% என்ற குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, தங்கக் கடன்களின் தேவையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த நிதி அமைப்பிலும் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடகு வைக்கப்படும் தங்க நகையின் பெறமானத்தில் அதிகபட்சமாக 70% வரை மட்டுமே கடன் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி கடந்த மே மாதம் கடன் எல்லையை நிர்ணயித்தது.



