யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி பெண் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பொத்துவில் – அருகம்பை பகுதியில் பதிவு

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அருகம்பை – சின்ன உள்ளை பகுதியில் காட்டு யானை தாக்கியதில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்குரிய இடங்களான அருகம்பை மற்றும் சின்ன உள்ளை பகுதிகளில் தினசரி ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அண்மைக்காலமாக இத்தகைய மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா மண்டலங்களுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையேயும் சுற்றுலாப் பயணிகளிடையேயும் கடும் பீதியும் அச்சமும் நிலவி வருகிறது.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு, அருகம்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வீதிகளில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் உடனடியாகத் தலையிட்டு, குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பகுதி மக்களும் சுற்றுலாத் துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்



