
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நாடு தழுவிய ரீதியில் போராட்ட வாரமொன்றை முன்னெடுக்க ஜன அரகல சந்தானய (மக்கள் போராட்டக் கூட்டணி) திட்டமிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், உணவு மற்றும் சுகாதார உபகரணங்கள்/சேவைகள் மீதான வரிகளை நீக்குதல், ஊழியர் சேமலாப நிதியத்தை முதலாளிகளிடம் ஒப்படைக்கும் நடைமுறையை நிறுத்துதல், ஓய்வூதியத்தை வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணுக்கு ஏற்ப திருத்தியமைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, நவம்பர் மாத முதல் வாரத்தில் இருந்தே இந்தப் போராட்ட வாரம் முன்னெடுக்கப்படும் என ஜன அரகல சந்தானயவின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்துப் பணித் தளங்களையும் மையப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தப் போராட்ட வாரத்தில் முழு நாட்டையும் இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாக நாகமுவ தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், மக்களை பாதிப்புக்குள்ளாக்கி மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தி வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை வரம்பின்றி உயர்த்தி, நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் கடுமையான வாழ்க்கை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மறுபுறம் மக்களின் உரிமைகளை பலவந்தமாகப் பறிக்கும் செயலில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
வரலாற்றில் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வகையில், தற்போதைய அரசாங்கம் உழைக்கும் மக்களின் சேமலாப நிதியத்தை முதலாளிகளிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.
சேமலாப நிதியத்தை அழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட நாகமுவ, அதைப் பாதுகாப்பதற்கான ஜனநாயகப் போராட்டத்தில் பணித் தள மட்டத்தில் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் அணிதிரள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதேபோல், சுகாதார உபகரணங்கள் மற்றும் சுகாதாரச் சேவைகளுக்கு அளவுக்கு அதிகமாக வரி விதித்து, இலவச சுகாதாரத்தை இல்லாமலாக்கும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் இறங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், வரிகளைக் குறைத்தல், சேமலாப நிதியத்தைப் பாதுகாத்தல், இலவச சுகாதாரத்தைப் பாதுகாத்தல், ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள போராட்ட வாரத்தில் இணையுமாறு நாட்டின் அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்தார்.



