News

எரிபொருள் விலையை உயர்த்தியது போதாது.. IMF இன் அடுத்தடுத்த தவணைகள் நிச்சயமற்ற நிலையில்…

அரசாங்கம் எரிபொருள் விலைக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் அடுத்த தவணையை விடுவிப்பது தொடர்பாக நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடந்த பேச்சுகளின் போது, எரிபொருள் விலையானது எப்போதும் செலவினங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட வேண்டும் என அவர்கள் கடுமையாக வலியுறுத்தியிருந்தனர். எனினும், அரசு எரிபொருள் மானியம் வழங்க தீர்மானித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஊழியர்கள் மட்டத்திலான (Staff-level) உடன்பாடு எட்டப்படாமல் நிறைவடைந்ததாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், உடன்பாட்டை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நாணய நிதியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு IMF உடன் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பது குறித்த மாற்று வழிகள் பற்றி அரசு ஆலோசித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர், தற்போதைய கடன் திட்டம் முடிந்த பிறகு மற்றொரு நிதித் திட்டத்திற்குச் செல்வதா, அதை நிறுத்துவதா அல்லது வேறு வகையான திட்டத்தில் நுழைவதா என்பது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சில தொழில்நுட்ப மற்றும் அளவியல் சார்ந்த காரணிகளின் பகுப்பாய்வுப் பணிகள் இன்னும் முடிவடையாததே, ஊழியர்கள் மட்டத்திலான உடன்பாடு தாமதமாவதற்கு முக்கிய காரணம் என்றும் திரு. வீரசிங்க கூறினார்.

இருப்பினும், இந்த ஆண்டு முடிவடைவதற்குள் ஏழாவது மதிப்பீட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, தொடர்புடைய கடன் தவணையைப் பெற முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Recent Articles

Back to top button