தென்மேற்கு கடலில் உள்ள 19 ஈரான் கப்பல்களுக்கு இலங்கை விநியோகங்களை வழங்கினால், இலங்கைக்கு தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா
தென்மேற்கு கடற்பகுதியில் உள்ள 19 ஈரானியக் கப்பல்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் நீர் உள்ளிட்ட விநியோகங்களை வழங்கினால் இலங்கைக்கு எதிராக இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) விதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (Wall Street Journal) செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இது குறித்து இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்குவது உகந்ததல்ல என துறைமுக அதிகாரசபை சில கப்பல்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் நடுப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட இலங்கை அதிகாரிகளின் பங்கேற்புடன் மூன்று நாள் பயிற்சித் திட்டமொன்றையும் அமெரிக்கத் தூதரகம் நடத்தியுள்ளது.
தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு கப்பல் முகவர்கள், எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் ஏனைய சேவை நிறுவனங்கள் “அறிந்தும் அல்லது அறியாமலும்” உதவி வழங்குவதன் மூலம் அமெரிக்கத் தடைகளுக்கு உள்ளாகும் அபாயம் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதாக அச்செய்தித்தாள் மேலும் தெரிவித்துள்ளது.



