News

அனோஜன் விடயத்தில் பாகிஸ்தானின் உதவியை நாடுமாறு கோரிக்கை !!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞனுக்கு, சவூதி மன்னரிடம் மன்னிப்புப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்

அவர்கள் முதற்கட்டமாக மாலைத்தீவுக்குச் சென்று அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியைக் கோரியதுடன், பின்னர் சவூதி அரேபியாவுக்குச் செல்லாமல் மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ளனர் .

இதற்கிடையில், அனோஜனைக் காப்பாற்றுவதற்காக கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அவரது பெற்றோர்கள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு மூலமாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் அனோஜனுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் சமூக வலைத்தளங்களில் பரவியது .

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சிறையிலுள்ள அனோஜன் தனது பெற்றோருடன் தொலைபேசியில் பேசுவது கூட முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .

இந்த நெருக்கடி குறித்து இணைந்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் சரியான இராஜதந்திர அணுகுமுறையைப் பயன்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார் .

சவூதி மன்னருடன் நேரடித் தொடர்புகளைக் வைத்துள்ள பாகிஸ்தான் பிரதமரின் உதவியை இதற்குப் பெற வேண்டும் என்றும், மத்திய கிழக்கு மோதல்களைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் தலையிட்டதை முன்னாள் ஜனாதிபதி நினைவு கூர்ந்தார் .

எனினும், இந்தியா மீதான தேவையற்ற பயம் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் பாகிஸ்தான் பிரதமருடன் கலந்துரையாடத் தயங்குவதாக முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டினார்.

அக்கூட்டத்திலேயே கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்; சர்வதேச சட்ட விதிகள் குறித்து முறையான புரிதல் இன்றி மாலிமா (NPP) அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் ஒருவர் செயற்பட்டமையால், அனோஜனுக்குக் கிடைத்திருந்த சிறைத் தண்டனை மரண தண்டனையாக தீவிரமடைந்ததாகத் தகவல்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button