News

முஸ்லிம் காங்கிரஸின் புதிய சட்டத்தரணிகள் அமைப்பு
தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொடங்கப்பட்டது – அரசாங்கம் இன்று பிரபல அரசியல்வாதிகளைக் கைது செய்யப்போவதாகப் பயமுறுத்தியும் பேசியும் வருகிறது எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

மக்களுக்குச் சட்ட உதவி வழங்கவும் நீதித்துறை சுயாதீனத்தைப் பாதுகாக்கவும் முஸ்லிம் காங்கிரஸின் புதிய சட்டத்தரணிகள் அமைப்பு
தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் தொடக்க நிகழ்வு; கட்சியின் முக்கியஸ்தர்கள்  சட்டத்தரணிகள் பங்கேற்பு


பாறுக் ஷிஹான்


சமூகம் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குச் சட்ட ரீதியாகத் தலையீடு செய்து தீர்வு காண்பதற்காகவும்  பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வச் ‘சட்டத்தரணிகள் அமைப்பு’ உருவாக்கப்பட்டு  அதன் அங்குராப்பண நிகழ்வும் விசேட கலந்தரையாடலும் கட்சியின் தலைவர்  பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை மூன் விலேச் ரெஸ்டுரெண்ட்  மண்டபத்தில் இன்று(3)  நடைபெற்றது.



குறுகிய கால அழைப்பினை ஏற்றுப் பெருமளவிலான சிரேஷ்ட மற்றும் இளம் சட்டத்தரணிகள், கட்சியின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தொடக்க உரையாற்றிய கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில்,


“எமது கட்சி பொதுமக்கள் எதிர்நோக்கும் சட்டச் சிக்கல்களுக்கு நேரடியாகத் தலையிட்டு உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சட்ட உதவி தேவைப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதோடு, நாட்டில் மக்கள் எதிர்கொள்ளும் பொதுப் பிரச்சினைகளை மையப்படுத்தி, அதற்குச் சட்ட ரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க உயர் நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் எமது கட்சி சார்பாக இந்த அமைப்பு ஊடாக நேரடியாகத் தலையீடுகளை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தார்.



அரசாங்கத்தின் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நீதித்துறை தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம், “அரசாங்கம் இன்று பிரபல அரசியல்வாதிகளைக் கைது செய்யப்போவதாகப் பயமுறுத்தியும் பேசியும் வருகிறது. நீதி விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை எனக் கூறிக்கொண்டாலும், நீதித்துறை சார்ந்த சில அரசியல்வாதிகள் நாளை நீதிமன்றத்தில் வரவிருக்கும் தீர்ப்புகள் குறித்து முன்னரே ஆரூடம் கூறுகிறார்கள்.


அவர்கள் ஊடகங்களில் பேசுவது போன்றே நீதிமன்றத் தீர்ப்புகளும் அமைவது, இந்நாட்டு மக்கள் நீதித்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்குப் பாரிய பாதகத்தை ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகளின் இவ்வாறான போக்கிற்கு எமது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்” எனச் சுட்டிக்காட்டினார்.



இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்,   முஸ்லிம் காங்கிரஸின் சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர்  , முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பொத்துவில் பிரதேச சபை   தவிசாளருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷாரஃப், சட்டத்தரணி ஷிபான் மஃரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல்  காசிம், மற்றும் பிரதிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மேலும், சிரேஷ்ட சட்டத்தரணி  அன்சார் மௌலானா உட்படப் பல சட்டத்தரணிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.



நிகழ்வின் நன்றியுரையைத் தொடர்ந்து, நாட்டின் தற்போதைய சட்ட மற்றும் சமூக-அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கட்சியின் எதிர்காலச் சட்ட ரீதியான அணுகுமுறைகள் குறித்தும் விரிவான கலந்தரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

—

Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button