ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சரியான நேரத்தில் பொருத்தமான தீர்மானத்தை எடுப்பார் ; பிரதமர்

பிரதமர் ஹரிணி அமரசூரிய கருத்து தெரிவிக்கையில், கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சரியான நேரத்தில் பொருத்தமான தீர்மானத்தை எடுப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்குமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர், இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும், நீதித்துறை ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கிவிட்டது என்றும் கூறினார்.
மேலும் எந்தவொரு நடவடிக்கையும் நீதித்துறையின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி எப்போதும் சரியான தீர்மானங்களையே எடுத்துவந்துள்ளார் எனக் குறிப்பிட்ட பிரதமர், பொருத்தமான முடிவுகளை எடுக்கும் ஜனாதிபதியின் திறமை மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி நீதித்துறை, நாட்டின் கலாசாரம் மற்றும் அரசியலமைப்பை மதிக்கிறார் என்று தெரிவித்த அவர், இந்தக் கோட்பாடுகளே அவரது முந்தைய தீர்மானங்களுக்கு வழிகாட்டியாகவும், இனிவரும் நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என்றும் கூறினார்.
கண்டியிலிருந்து பௌத்த துறவிகளால் தொடங்கப்பட்ட பேரணி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த உரையை ஆற்றினார்.
ஆரம்பத்தில் ஞானசார தேரர் சிறை ஆடை அணிய வேண்டும் என்ற நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, தற்போது ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரும் போராட்டமாக மாறியுள்ளது.
கண்டியில் உள்ள மல்வத்து மகா விகாரை மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளுக்கு நேற்று (15) விஜயம் செய்த பிரதமர் அமரசூரிய, இரு பீடங்களின் மகாநாயக்க மற்றும் அனுநாயக்க தேரர்களைச் சந்தித்து, அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பைச் சமர்ப்பித்த பின்னர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.



