News

கோதுமை மாவின் விலை உண்மையில் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட வேண்டும் – நிறுவனங்கள்

நுகர்வோர் சேவை அதிகார சபையிடம் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 20 ரூபாவால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், மாவின் விலையை அதிகரிக்க 13 ரூபாவிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்யும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு கோதுமை மா இறக்குமதி செய்யப்படுவதாகவும், நிலவும் போர்ச் சூழல் காரணமாக கோதுமை மணி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை, கப்பற் கட்டணங்கள் அதிகரித்துள்ளமை மற்றும் டாலரின் மதிப்பு உயர்வடைந்துள்ளமை போன்ற காரணங்களால் கோதுமை மா உற்பத்தியில் தொடர்ச்சியாக நஷ்டம் ஏற்பட்டு வருவதாலேயே கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 20 ரூபாவால் உயர்த்துவதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சில்லறை விலையாக 220 ரூபாவிற்கு விற்கப்படும் பாண் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் ஒரு கிலோகிராம் அதிகரித்த விலையுடன் ஒப்பிடப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இந்த விலை அதிகரிப்பினால் தனது நிறுவனத்தின் கோதுமை மா விற்பனை குறைந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதனிடையே, கோதுமை மாவின் விலை இவ்வாறாக அதிகரிக்கப்பட்டமையால் தங்களின் வருமான நிலை குறைந்துள்ளதாகவும், தாங்கள் தினசரி இரு வேளைகளும் கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களையே உட்கொள்வதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு காரணமாக சிற்றுண்டிச்சாலைகளில் சிற்றுண்டிகளின் விலையை உயர்த்த வேண்டிய ஏற்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பாண் மற்றும் ஏனைய மா சார்ந்த தயாரிப்புகளின் விலைகள் உயர்வடைந்தமையால் தங்களது வியாபார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டப் பகுதி பேக்கரி உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(செய்தியாளர்: ரஞ்சித் ராஜபக்ச)

Recent Articles

Back to top button