கொழும்பு மாணவர்களின் பல்வேறு பிரச்சினைகளை ஆளுநரின் நேரடி கவனத்துக்கு கொண்டுவந்த ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்ளால் மௌலவி !
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளர் மிப்ளால் மௌலவி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அவர்களை இன்று (26) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து, கல்வி, சுகாதாரம் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது, கொழும்பு மாவட்டத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஆளுநர் உறுதியளித்ததாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மிஃளால் மௌலவி குறிப்பிட்டார்.
மேலும், வெள்ளம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்திய கொழும்பிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்பதால் எதிர்கொள்ளும் போக்குவரத்துச் சிரமங்கள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மாணவர்களின் போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், பொருத்தமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பஸ் வழித்தட சேவைகளை ஒழுங்கமைத்தல் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
அத்துடன், கல்முனை ஆதார வைத்தியசாலையில் முஸ்லிம் சமூகத்தினருக்கு ஏற்பட்ட அநீதி மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களும் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாக மிஃளால் மௌலவி தெரிவித்தார்.
இதேவேளை, வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, பாகிஸ்தானில் மருத்துவக் கல்வியைத் தொடரும் மாணவர்களின் விவகாரத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துதல், மாணவர்களின் அன்றாடப் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சுகாதாரத் துறையில் எழுந்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துதல் மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகிய விடயங்களை முன்னிறுத்தி இச்சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.



