அழுத்த தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறி இலங்கையைச் சுற்றி வளைக்கிறது..

வங்கக்கடல் கடல் பகுதியில் நிலைபெற்றிருந்த ஆழமான அழுத்த தாழ்வுப் பகுதி (Deep Depression) புயலாக வலுவடைந்துள்ளதுடன், அது எதிர்வரும் சில மணித்தியாலங்களில் ‘கடுமையான புயலாக’ (Severe Cyclonic Storm) மாறி வடமேற்கு திசையில் நகரும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை பேரழிவுகள் குறித்த முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, வங்கக்கடலின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பரப்புகளில் உலாவும பலதுறை மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பல நிலப்பரப்புப் பகுதிகளுக்கு இடிமின்னல் குறித்த ‘அம்பர்’ எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
வளிமண்டலவியல் திணைக்களத்தின்படி, வங்கக்கடலின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு கடற்பகுதியில் காணப்பட்ட இந்தத் தொகுதியானது, வட அட்சரேகை 15.4 மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 88.9 க்கு அருகில் மையங்கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 11.30 மணியளவில் மேற்கு-மத்திய வங்கக்கடல் கடல் பகுதியில் கடுமையான புயலாக மாறக்கூடும்.
இந்தத் தொகுதியுடன் தொடர்புடைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என்பதுடன், கடல் அலைகள் 3.0 முதல் 4.0 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடும்.
இதன் காரணமாக, குறித்த கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், வட அட்சரேகை 10க்கும் 20க்கும் இடையில் மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 80க்கும் 95க்கும் இடைப்பட்ட கடல் எல்லைகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அத்துடன், ஏற்கனவே இக்கடல் பிரதேசங்களில் தியங்கும் படகுகள் உடனடியாக பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதற்கிடையில், வடமத்திய மாகாணம் மற்றும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் ஓரிடத்தில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடிமின்னல் ஏற்படும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமான பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் மற்றும் இடிமின்னல் நிலவும் வேளைகளில் திறந்த வெளியிலோ அல்லது மரங்களின் கீழோ நிற்க வேண்டாம் எனவும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள திறந்த வெளிகளில் தங்கியிருப்பதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கம்பித் தொலைபேசிகள் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், துவிச்சக்கர வண்டிகள், டிராக்டர்கள் அல்லது திறந்த படகுகளின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு பாதுகாப்பான கட்டிடத்தினுள் அல்லது மூடப்பட்ட வாகனத்தினுள் தங்கியிருக்குமாறும் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.



