பணவீக்கம் சிறிது அதிகரித்துள்ளது; பொதுமக்களுக்கு சிரமம் – ஜனாதிபதி
வரவிருக்கும் பட்ஜெட்டில் அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வருவாய் இலக்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில வரி வகைகளை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே நாட்டின் தற்போதைய பொருளாதார செயல்பாடு மற்றும் நிதிப் போக்குகள் குறித்து ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்றது முதல் இதுவரை புதிய வரி எதும் அறிமுகப்படுத்தப்படவில்லை சுட்டிக்காட்டிய அவர், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில வரிகள் கணிசமாக தளர்த்தப்பட்டுள்ளதாகவும், வரவிருக்கும் பட்ஜெட்டில் அந்த நிவாரணங்கள் பொதுமக்களுக்கு மேலும் வழங்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.
கடந்த கால ஆட்சிகளில் உத்தேச அரச வருவாய் இலக்குகளில் 90% மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்த போதிலும், தற்போதைய நிர்வாகத்தின் கீழ் முதன்மை நிதி உபரியைப் பேணி எதிர்பார்க்கப்பட்ட வருவாய் இலக்குகளையும் தாண்டிச் செல்ல முடிந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலமாக நாட்டைச் சூழ்ந்துள்ள கடன் சுமையிலிருந்து விடுபடவும், பெரும்காலப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த முதன்மை நிதி உபரி அத்தியாவசியமான காரணியாகும் என்றும் ஜனாதிபதி விளக்கினார்.
பணவீக்கம் அதிகரித்தமையால் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கும் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரச் சிரமங்கள் குறித்தும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். பொதுவாக பணவீக்க விகிதத்தை 5% க்கும் குறைவாகப் பேணுவதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் எனினும், தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பின்படி அதனை 2% மற்றும் 7% இடைவெளிக்குள் பேணுவதற்கு அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளது என்றார்.
“தற்போது பணவீக்கத்தில் சில தாக்கம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கத்தை 5% க்கும் குறைவாகப் பேண வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. 2% முதல் 7% வரை தான் பணவீக்கத்தை வைத்திருக்க வேண்டும். அது எமது சட்டரீதியான பொறுப்புமாகும்.
இந்த பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 8% ஐ விட சற்று உயர்வான நிலைக்கு வந்துள்ளது. இதனால் எங்கள் நாட்டின் மக்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதில் சற்று சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு முக்கியக் காரணம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலாகும். அந்தப் போர்ச் சூழல் எமது விநியோக வழிகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.”
எவ்வாறாயினும், கடந்த செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 8% அளவைச் சற்றுத் தாண்டியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு ஏற்பட்ட தடைகளே இதற்குக் காரணம் என்றார்.
இவ்வாறான சூழ்நிலைகளில் வாழ்க்கைச் செலவு அழுத்தத்திற்குள்ளாகும் குடும்ப அலகுகளுக்கு நிவாரணம் வழங்குவதும், கடுமையான நிதி ஒழுக்கத்தைப் பேணுவதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



