News

கேஸ் சிலிண்டர்களை பொது மக்களுக்கு வழங்காமல் பதுக்கி வைத்திருந்த கண்டிப் பிரதேச வர்த்தக நிலையம் சோதனை செய்யப்பட்டு 28 சிலிண்டர்கள் பறிமுதல் – வர்த்தகருக்கும் அபராதம்

கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் இயங்கிவந்த “D.D. குருசிங்க டிரேடிங்” என்ற அங்கீகரிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர், தன்வசம் கையிருப்பில் இருந்தும் எரிவாயு சிலின்டர்களை (Gas cylinders) விநியோகிக்க மறுத்ததற்காகக் கண்டி நீதிவான் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.


நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் எடையுள்ள 28 லிட்ரோ எரிவாயு சிலின்டர்களையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகார்களின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 29 ஆம் திகதி இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


சோதனையின் போது, அதிகாரசபையின் விசாரணை அதிகாரி ஒருவர் வாடிக்கையாளர் போலச் சென்று 12.5 கிலோ எரிவாயு சிலின்டரைக் கேட்டுள்ளார்.

ஆனால், தங்களிடம் எரிவாயு சிலின்டர்கள் எதுவுமில்லை என அந்த வியாபாரி கூறியுள்ளார்.


தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், விற்பனைக்குத் தயாராக 28 லிட்ரோ எரிவாயு சிலின்டர்கள் இருப்பு இருப்பது கண்டறியப்பட்டது.


இதையடுத்து, அந்த சிலின்டர்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் வியாபாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.


வழக்கு விசாரணைகளின் முடிவில், வியாபாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட 28 சிலின்டர்களும் அரசுடமையாக்க உத்தரவிடப்பட்டது.


2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் 16(a) பிரிவின் கீழ், விற்பனைக்கான பொருட்கள் கையிருப்பில் இருக்கும் போது, அவை இல்லை எனப் பொய்யாகக் கூறுவது தடை செய்யப்பட்டுள்ளது.


பொருட்களைப் பதுக்குதல், நுகர்வோரை ஏமாற்றுதல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடுப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் இத்தகைய சோதனைகள் தொடரும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.


இவ்வாறான சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் 1977 என்ற அதிகாரசபையின் அவசர அழைப்பு இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button