நாம் பொதுமக்களுக்கு தேவையற்ற எந்தவொரு வரியையும் விதிக்கவில்லை.. ஏற்கனவே இருந்த வரிகளை மட்டுமே சரிசெய்தோம்..

தற்போதைய அரசாங்கம் பொதுமக்கள் மீது எத்தகைய தேவையற்ற கூடுதல் வரிச் சுமையையும் சுமத்தவில்லை என்றும், இதுவரை இருந்த வரி கட்டமைப்பில் இருந்த குறைபாடுகள் மற்றும் முரண்பாடுகளைத் திருத்தி அதனை மிகவும் நியாயமான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறைய மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜெயந்த வலியுறுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதியமைச்சர், இலவசக் கல்வி, சுகாதார சேவை, அத்தியாவசிய பொதுச் சேவைகளைப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான முக்கிய மூலாதாரம் வரி வருமானம் சுட்டிக்காட்டினார்.
எனவே, வரி முறையின் செயல்திறனை உயர்த்தி நியாயமான வரி கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரு வருட காலத்தில் வரி நிர்வாகத்தை முறைப்படுத்துதல், வரியை திறம்பட அறவிடுதல் மற்றும் மக்கள் வரி செலுத்த ஊக்குவித்தல் என்பவற்றுக்காக அரசாங்கம் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அதன் விசேட பயனாய் நாட்டின் வரி அடிப்படை விரிவடைந்து 2025 ஆம் ஆண்டுக்காக எதிர்பார்க்கப்பட்ட இலக்கு அளவை விட அதிகமான வரி வருமானத்தை பெருஞ்சேம நிதிக்கு ஈட்டிக்கொள்ள முடிந்தது எனவும் வெளிப்படுத்தினார்.
அரசாங்கம் பல்வேறு வரிகளை தன்னிச்சையாக அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக சில தரப்பினர் கொண்டு செல்லும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானவை எனத் தெளிவுபடுத்திய பிரதியமைச்சர், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய வரித் திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என விளக்கமளித்து கேட்டுக்கொண்டார்.



