ஒரு தனி மனிதனின் அதிகார துஷ்பிரயோகத்தால் நாட்டுக்கு சுமார் 14.8 மில்லியன் ரூபாய் நஷ்டம்

முன்னாள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க, பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் இன்று (10) கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் தனது தனிப்பட்ட தேவைக்காகப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களைப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 14.8 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
நிஷாந்த ரணதுங்க தனது தனிப்பட்ட வீட்டின் பாதுகாப்புக்காக சட்டப்பூர்வமாக எந்த உரிமையும் இல்லாத நிலையில், இரு பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்து அவர்களுக்குத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நீர் வழங்கல் சபையின் மூலம் சுமார் 5.8 மில்லியன் ரூபாயை வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
.
மேலும், தனது சொந்த உபயோகத்திற்காக இரு ஓட்டுநர்களைச் சட்டவிரோதமாகப் பணியில் அமர்த்தி, சபை நடைமுறைப்படுத்திய நீர் வழங்கல் திட்ட ஒப்பந்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அவர்களுக்குச் சுமார் 9 மில்லியன் ரூபாயைச் செலுத்த ஏற்பாடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
இந்தச் செயல்களின் மூலம் அரசாங்கத்திற்குச் சுமார் 14.8 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ள அதேவேளையில், ரணதுங்க சட்டவிரோதமான முறையில் தனிப்பட்ட நன்மைகளைப் பெற்றுள்ளாரென லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
.
ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று மதியம் 1.30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் ரணதுங்க கைது செய்யப்பட்டார்.
.
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
.
அவரை 75,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 1 மில்லியன் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டார்.
.
அத்துடன், முன்னாள் நீர் வழங்கல் சபை தலைவருக்கு வெளிநாடு செல்லத் தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



