இந்த அரசாங்கம் ஈரானுக்கு எதிரான நடவடிக்கை இஸ்ரேலிடமிருந்து 4.26 பில்லியன் ரூபாய் பெறுமதியான கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை வாங்க எவ்வளவு கமிஷன் வாங்கினார்களோ தெரியா… ; ரவூப் ஹக்கீம்

இஸ்ரேலிடமிருந்து 4.26 பில்லியன் ரூபாய் பெறுமதியான கண்காணிப்பு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கடுமையான கரிசனையை வெளியிட்டுள்ளார். இந்தக் கொள்வனவு நடைமுறையைக் கேள்விக்குட்படுத்தியுள்ள அவர், அமெரிக்காவின் சார்பாக உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்காக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஹக்கீம், போட்டித்தன்மை கொண்ட விலைமனுக்களைக் கோராமல் அரசாங்கம் ஏன் இந்தக் கொள்வனவை முன்னெடுக்கின்றது எனக் கேள்வி எழுப்பினார்.
.
“ஆளில்லா வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்காக 4 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான குறைநிரப்பு மதிப்பீடு அண்மையில் நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இவற்றை நாம் யாரிடமிருந்து வாங்குகிறோம்? இஸ்ரேலிடமிருந்து” என ஹக்கீம் தெரிவித்தார்.
.
“திடீரென ஏன் இவ்வளவு அவசரம்? விலைமனுக்களைக் கோராமல் நேரடியாகவே கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்கள். நாம் ஏன் இந்த விமானங்களை இஸ்ரேலிடமிருந்து வாங்க வேண்டும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
.
இந்தக் கொள்வனவுடன் தொடர்புடைய நிதி ரீதியான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் ஹக்கீம் எழுப்பிய போதிலும், தனது குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை.
.
“இஸ்ரேலிய அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு தரகுப்பணம் (கமிஷன்) பெறப்பட்டதோ யாருக்குத் தெரியும்?” என அவர் வினவினார்.
.
மேலும் ஒரு படி மேலே சென்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ஈரானிய கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் அமெரிக்காவிற்கு உளவுத் தகவல்களை வழங்குவதற்கும் இந்தக் கண்காணிப்பு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படக்கூடும் எனக் குற்றம் சுமத்தினார்.
.
“ஈரானை உளவு பார்ப்பதற்கும், ஈரானிய கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவை குறித்த உளவுத் தகவல்களை வழங்குவதற்குமே இந்த விமானங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன” என ஹக்கீம் குற்றம் சாட்டினார்.
.
“அமெரிக்கர்களுக்காக உளவு பார்க்க எமது கடற்படையையும் விமானப்படையையும் பயன்படுத்தப் போகிறோமா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
.
நாட்டின் வெளிநாட்டு உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான செயற்பாடுகளில் இலங்கையின் பாதுகாப்புப் படைகளை ஈடுபடுத்துவதற்கு எதிராக அவர் அரசாங்கத்தை எச்சரித்தார்.
.
“இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு நீங்களாகவே சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏற்கனவே நீங்கள் போதுமான அளவு பிரச்சினைகளை உருவாக்கிவிட்டீர்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.



