குழந்தை பிறப்பு விகிதம் குறைவு… முதல் வகுப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 40,000ஆல் வீழ்ச்சி !

இலங்கை கல்வி முறைமையில் முதல் வகுப்பிற்கான மாணவர்களின் சேர்ப்பு ஆண்டுதோறும் சுமார் நாற்பதாயிரத்தால் (40,000) குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக விசேட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது என கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் வருடாந்த குழந்தை பிறப்பு விகிதத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான வீழ்ச்சியே இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சுத் தரவுகளின்படி, பொதுவாக நாட்டின் பாடசாலைகளில் முதல் வகுப்பிற்காக ஆண்டுதோறும் சேர்த்துக்கொள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மூன்று இலட்சத்திற்கு (300,000) அருகில் காணப்படுகிறது.
இதற்கிடையில், நாடு முழுவதும் புதிதாக 309 ஆரம்பப் பாடசாலைகளை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவற்றில் 31 ஆரம்பப் பாடசாலைகள் இந்த ஆண்டிற்குள்ளேயே ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அந்தப் பாடசாலைகள் அனைத்தும் ஒரே மாதிரியான கவர்ச்சிகரமான கட்டடக் கலை வடிவமைப்பின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ளன. மேலும், நவீன தரங்களுக்கு ஏற்ற புதிய மலசலக்கூட மற்றும் சுகாதார முறைமைகள் அந்த ஆரம்பப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தவிர, நீண்ட காலமாக அதிக போட்டித்தன்மைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வரும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரிட்சையில் எதிர்வரும் காலங்களில் சில மாற்றங்களும் திருத்தங்களும் மேற்கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டு வருவதாகவும் அந்தச் செய்தி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



