அம்பாறையில் அபூபக்கர் எம்.பி பொய்யையே கூறி திரிகிறார் – பாராளுமன்றத்தில் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவிப்பு !

நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்டத்தின் கிடாஓயா திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிவித்த திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, அதற்காக 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
2026 நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல்வாதியான அபூபக்கர் ஆதம்பாபா, கல்முனையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கிடாஓயா திட்டத்திற்கு ஜனாதிபதி 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதாகத் பொய்யை தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
எனினும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் கிடாஓயா திட்டத்திற்காக 200 மில்லியன் ரூபாவே குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த உதுமாலெப்பை, 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகக் கூறுவதில் பொய்யுள்ளதை சுட்டிக்காட்டினார்.
குறித்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான அறிக்கையையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்தார். அதேபோன்று, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மைக்காக நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதாக வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள நிலையில், குறித்த நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உதுமாலெப்பை தெரிவித்தார்.
குறிப்பாக, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நன்மை பயக்கும் மாஹா ஓயா குளத்தின் புனரமைப்புக்காக 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அபூபக்கர் ஆதம்பாபா 7,700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்மூலம் அனைத்துப் பணிகளும் நிறைவடையும் என்றும் கூறியுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மாஹா ஓயா குளத்தின் புனரமைப்புத் திட்டம் இரு மாவட்ட மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனச் சுட்டிக்காட்டிய அவர், இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் பொதுமக்களுக்கு சரியான தகவல்கள் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
கிடாஓயா திட்டம் மற்றும் மாஹா ஓயா குளம் புனரமைப்புத் திட்டம் தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கும், மக்கள் மத்தியில் தெரிவிக்கப்படும் தகவல்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை பாராளுமன்றத்தில் முன்வைத்த எம்.எஸ். உதுமாலெப்பை, இவ்விடயங்கள் தொடர்பான ஆவணங்களையும் சபையின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR



