News

பிரபல கைபேசி விற்பனை நிறுவனத்துக்கு 100,000 ரூபா அபராதம்

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உத்தரவுகளை மீறி, இறக்குமதியாளர் குறித்த எந்தவொரு தகவலும் இல்லாத கையடக்கத் தொலைபேசியை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமைக்காக, கொழும்பில் உள்ள பிரபல தொலைபேசி விற்பனை நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 100,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.


கொழும்பு 03, லிபர்ட்டி பிளாசா வணிக வளாகத்தில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளால் குறித்த கடையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே, இந்தச் சட்டவிரோதக் கையடக்கத் தொலைபேசி விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத்


தொலைபேசியில் இறக்குமதி செய்யப்பட்ட நாடு, இறக்குமதியாளர் அல்லது சந்தைக்கு வழங்குபவரின் பெயர், முகவரி மற்றும் உரிய தொடர்புத் தகவல்கள் எவையும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.


அதற்கமைய, நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் கடந்த 11 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


2022 ஜூன் 29 ஆம் திகதியிடப்பட்ட இலக்கம் 2286/26 விசேட வர்த்தமான அறிவித்தலின்படி வெளியிடப்பட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 85 ஆம் இலக்க உத்தரவின் அடிப்படையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் பொதிகளிலும் அல்லது கொள்கலன்களிலும் இறக்குமதி செய்யப்பட்ட நாடு, இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொடர்புத் தகவல்கள் தெளிவாகக் குறிப்பிடப்படுவது கட்டாயமாகும்.


சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்தச் சட்டப்பூர்வ விதியை வெளிப்படையாக மீறியுள்ளது.


இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்ட மின் மற்றும் இலத்திரனியல் உபகரணங்களை வாங்கும் போது லேபிள் தகவல்கள், உத்தரவாத அட்டை (Warranty) மற்றும் வாங்கியதற்கான உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டு ஆகியவற்றை நன்கு பரிசோதித்துப் பார்க்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் கடுமையான சோதனைகளையும் விசாரணைகளையும் முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நுகர்வோர் சட்ட மீறல்கள் தொடர்பில் தெரிவிக்க அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button