News

அனுராதபுரம் புனித நகர எல்லைக்குள் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டமும் இல்லை

முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், அனுராதபுரம் புனித நகர எல்லைக்குள் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டமும் இல்லை என பதில் அட்டமஸ்தானாதிபதியும், ருவன்வெலிசாய விகாரையின் விகாராதிபதியுமான ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக தேரர் உறுதியளித்துள்ளார்.
.
புத்தசாசன அமைச்சில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேரர், முன்மொழியப்பட்டுள்ள இந்த அபிவிருத்தித் திட்டத்திற்குத் தடைகளை ஏற்படுத்தாமல், அதற்கு ஆதரவளிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
.
இத்திட்டத்தின் சில விடயங்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் போதியளவு தெளிவுபடுத்தப்படாத காரணத்தினாலேயே இவ்வாறான அச்சங்களும் சந்தேகங்களும் எழுந்துள்ளதை அவர் ஏற்றுக்கொண்டார்.
.
கால்நடைகளால் ஏற்படும் சேதங்கள், சட்டவிரோதக் கட்டுமானங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே புனிதப் பகுதியைச் சுற்றி வேலி அமைக்கும் யோசனை முன்வைக்கப்பட்டதாக தேரர் தெளிவுபடுத்தினார்.
.
எவ்வாறாயினும், குறித்த வேலி அமைக்கும் யோசனை தற்போது கைவிடப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
.
புனிதப் பகுதியின் எல்லையை 28 சதுர கிலோமீற்றரிலிருந்து 38 சதுர கிலோமீற்றராக விரிவுபடுத்துவது தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளித்த தேரர், மத வழிபாட்டுக் காலங்களில் அனுராதபுரத்திற்கு வருகை தரும் பெருமளவான பக்தர்களின் கூட்டத்தை நிர்வகிப்பதற்கான தேவையையும் கருத்திற்கொண்டே இந்த அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
.
புனித நகரிலிருந்து மக்களை வெளியேற்றும் எந்தவொரு நோக்கமும் கிடையாது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
.
எதிர்காலச் சந்ததியினருக்காக அனுராதபுரத்தின் மத மற்றும் தொல்பொருள் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்குப் பொதுமக்கள் தமது ஆதரவை வழங்குமாறு தேரர் அழைப்பு விடுத்தார்.
.
பதில் அட்டமஸ்தானாதிபதி மற்றும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற, அனுராதபுரம் புனித நகர அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி ஆலோசனைக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்தே தேரர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button