News

இலங்கை பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படும் என அறிவிப்பு..


எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



இலங்கை பொருளாதார நிபுணர்கள் சங்கம் இன்று (18) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சிரிமெவன் கொழும்பகே இதனை குறிப்பிட்டிருந்தார்.



தொடர்ந்துரையாற்றிய அவர்



கடந்த சில ஆண்டுகளாக நிலவிய பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தொடர்ச்சியாகப் பேணுவதில் சிக்கல் நிலவுகிறது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் சுமார் 5% ஆகக் காணப்பட்டது.



ஆனால், இந்த வளர்ச்சியைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் உள்ளது. புள்ளிவிபரத் தரவுகளின்படி, இவ்வருடத்தின் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% முதல் 4% வரையான மட்டத்தில் காணப்படும் என்பது தெளிவாகிறது.



அதேபோன்று 2027, 2028, 2029 ஆகிய ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி வேகம் 3% அளவிற்குக் குறையும்.



இதன்படி, இந்த வளர்ச்சியைத் தொடர்ச்சியாகப் பேணுவது கடினம் என்பது எமக்குத் தெளிவாகிறது. மேலும், எமது நாடு 8% பொருளாதார வளர்ச்சி வேகத்தைத் தாண்டியது இரண்டு சந்தர்ப்பங்கள் மட்டுமே உள்ளன.



அதாவது, 1978 ஆம் ஆண்டிலும் அதேபோன்று 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் 2010 – 2011 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் 8% வளர்ச்சி வேகத்தை எட்ட முடிந்தது.



ஆனால் இவற்றைத் தொடர்ச்சியாகப் பேணுவது கடினமாக இருந்தது. கடந்த 40 – 50 ஆண்டுகளை நோக்கினால் நாம் தொடர்ச்சியாக எமது முதலீடுகளை அதிகரித்துள்ளோம்.



இருப்பினும், முதலீடுகளை அதிகரிக்க அதிகரிக்க நாம் அடைய வேண்டியிருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளது. இன்றளவில் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வந்து சேர்ந்துள்ளது.



1960 ஆம் ஆண்டில் தென் கொரியாவின் தனிநபர் வருமானம் 156 டொலராக இருந்தது. இலங்கையின் தனிநபர் வருமானம் 146 டொலராக இருந்தது.



ஆனால் இன்று இவ்விரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தைப் பார்த்தால்: தென் கொரியாவின் தனிநபர் வருமானம் இன்று சுமார் 36,200 டொலராக உள்ளது.



இலங்கையின் தனிநபர் வருமானம் கடந்த ஆண்டில் 5,002 டொலராகவே இருந்தது. அவ்வாறாயின் தென் கொரியாவின் வருமானம் எமது வருமானத்தை விடக் குறைந்தபட்சம் ஏழு மடங்கு அதிகமாகும்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button