News

8.3 ஆக உள்ள பணவீக்கம், உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள காரணத்தால் இம்மாத இறுதிக்குள் 9 வீதம் ஆகும்… பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது ; மத்திய வங்கி

இலங்கையில் இம்மாத இறுதிக்குள் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.



அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் (EFF) கீழான ஏழாவது மீளாய்வுக்கு அமைவாக, இலங்கைக்கு வழங்கப்படவுள்ள சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவித் தவணையும் இம்மாத இறுதிக்குள் கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் 2023ஆம் ஆண்டு 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு ஆண்டு விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.



இதன் ஏழாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி பணியாளர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் இறுதி அங்கீகாரம் அவசியமாகும்.



மறுபுறம், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளமை இலங்கையின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.



2026 ஒக்டோபர் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 8.3 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கி நேற்று (19) எடுத்த தீர்மானத்தின்படி, கொள்கை வட்டி வீதம் 0.25 சதவீதப் புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டு 9 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு, பணவீக்க அதிகரிப்பும் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த நிதியுதவியும் முக்கிய பொருளாதாரக் காரணிகளாக அமைந்துள்ளன.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button