இது என்ன திமிர்.. போராடி வெல்லும் அறவழிப் போராட்டத்தைத் தொடங்குகிறோம்..- மஹிந்த ஜயசிங்கவை கடுமையாக விமர்சித்து ஸ்டாலின்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது எனத் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விடுத்துள்ள கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அதற்கு எதிராக எதிர்வரும் 30ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய ஜோசப் ஸ்டாலின், போராட்டம் நடத்தினாலும் சம்பளக் கோரிக்கைகளை வழங்க முடியாது எனப் பலம்வாய்ந்த தொழிற்சங்கத் தலைவரும் தற்போதைய பிரதி அமைச்சருமான மஹிந்த ஜயசிங்க திமிர்த்தனமான கருத்துகளை வெளியிட்டு, ஒட்டுமொத்த ஆசிரியர், அதிபர் மற்றும் உழைக்கும் வர்க்கத்தையே ஏளனத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாட்டில் மூன்றில் ஒரு (1/3) பங்கு வழங்கப்பட்டதாகவும், எஞ்சிய மூன்றில் இரண்டு (2/3) பங்கை வென்றெடுப்பதற்காகத் தற்போதைய பிரதி அமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் அன்று ஒன்றிணைந்து போராடியதாகவும் அவர் நினைவு கூர்ந்தார். அவ்வாறிருக்கையில், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளையும் கோரிக்கைகளையும் மறந்து இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதன் மூலம் ஆட்சியாளர்களின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அநீதிக்கு எதிராக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 30ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமாகச் சுகவீன விடுமுறை அறிக்கை சமர்ப்பிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக ஸ்டாலின் உறுதிப்படுத்தினார்.
அரசாங்கத்திற்கு ஆதரவான இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தைத் தவிர, கல்வித் துறையில் உள்ள ஏனைய அனைத்து ஆசிரியர் மற்றும் தராதர அதிபர் சங்கங்களும் இந்த நடவடிக்கைக்கு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, கடந்த ஜூன் 26ஆம் திகதி கொழும்பில் 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்தியதாகவும், கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஆசிரியர்கள் போராடியது இந்த நிலுவைச் சம்பளப் பகுதியைப் பெறுவதற்கே என்றும் நினைவு கூர்ந்த அவர்; ஆணை வழங்கிய மக்களின் கோரிக்கைகளை ஒதுக்கித் தள்ளிச் செயற்பட எந்தவொரு ஆட்சியாளரையும் அனுமதிக்க மாட்டோம் என்றும், போராட்டத்தின் மூலமாவது அந்த உரிமைகளை வென்றெடுப்போம் என்றும் வலியுறுத்தினார்.



