News

கல்முனை வலயப் பாடசாலையில் மாணவர் போசாக்குணவு திட்டத்தில் குறைபாடு?





சமைக்கப்படாத கோழி இறைச்சி வழங்கப்பட்டதாக பெற்றோர் விசனம்; உரிய விசாரணை நடத்துமாறு கோரிக்கை

(மருதமுனை செய்தியாளர்)

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 01 முதல் தரம் 05 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசின் போசாக்குணவு திட்டத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் போதியளவு சுத்தம் செய்யப்படாததும், முழுமையாக வேகவைக்கப்படாததுமான கோழி இறைச்சி காணப்பட்டதாகவும், இதனால் மாணவர்கள் உணவை உட்கொள்ளாமல் புறக்கணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் வலயக் கல்வி அலுவலகத்தின் போசாக்குணவு திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரியினால் அறிவுறுத்தப்பட்ட உணவு ஒழுங்கின்படி சோறு, கோழிப் பொரியல், கடலைக்கறி மற்றும் பேரீச்சம்பழம் வழங்கப்பட வேண்டியிருந்தது.
எனினும், உணவு விநியோகத்தரால் வழங்கப்பட்ட உணவில் கோழி இறைச்சி முறையாக சமைக்கப்படாத நிலையில் காணப்பட்டதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசியதாகவும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் உணவை உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதுடன், பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் மற்றும் போசாக்கு தொடர்பில் பெற்றோர் மத்தியில் கவலை எழுந்துள்ளது.

உணவின் அளவு மற்றும் தரம் குறித்தும் குற்றச்சாட்டு

குறித்த வகுப்புகளுக்குப் பொறுப்பான ஆசிரியைகளிடம் பெற்ற தகவல்களின்படி, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் அளவு போதுமானதாக இல்லை எனவும், சிறிய பாத்திரமொன்றின் அரைவாசிக்கும் குறைவான அளவிலேயே உணவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை அதிபர் மற்றும் அதிகாரிகளால் உணவு விநியோகத்தில் உரிய சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும், மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவது கவலையளிப்பதாக ஆசிரியைகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரச நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா?

பாடசாலை மாணவர்களின் போசாக்குணவு திட்டத்திற்காக ஒரு மாணவனுக்கு 110 ரூபா அரசாங்கத்தினால் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சில பாடசாலைகளில் உணவு விநியோகத்தர்களுக்கு வழங்கப்படும் தொகையிலிருந்து பாடசாலை நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கான செலவுகள் ஈடு செய்யப்படுவதாகவும், இதனால் உணவின் தரம் மற்றும் அளவு பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனினும், இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய அதிகாரிகளின் விசாரணை மூலம் உண்மை நிலை வெளிப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

மாணவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்

அரசாங்கத்தின் போசாக்குணவு திட்டம் மாணவர்களின் ஆரோக்கியத்தையும் கல்வி வளர்ச்சியையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு சுத்தமானதாகவும், போதிய அளவிலும், முறையாக சமைக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

எனவே, கல்முனை வலயக் கல்வி அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி, உணவின் தரம், அளவு மற்றும் விநியோக நடைமுறைகளை பரிசோதிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், மாணவர்களுக்கு உணவு வழங்கும் போது பிளாஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுவதையும் முற்றாகத் தடுத்து, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மாணவர்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய இவ்விடயத்தில் அலட்சியம் காட்டப்படாமல், போசாக்குணவு திட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் கல்விச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button