இந்த அரசாங்கத்திடம் கத்திப் பெறவும் முடியாது.. கத்தினாலும் தரவும் மாட்டோம் – வீதியில் இறங்கியவர்களுக்கு ஜனாதிபதி பதிலடி

உழைக்கும் மக்கள் என்ற பெயரில் போராட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்குப் பின்னால் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களே இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தப் போராட்டக்காரர்கள் எவ்வளவுதான் கத்தினாலும் அரசாங்கத்திடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
‘வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்’ எனும் தொனிப்பொருளில் இன்று (26) நடைபெற்ற தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,
“நான் கூறுவது என்னவென்றால், இந்த அரசாங்கத்திடம் ஒருபோதும் கத்திப் பெறவும் முடியாது. கத்தினாலும் தரவும் மாட்டோம். கத்துவதற்கு முன்னரே கொடுத்துவிடுவோம். அவர்கள் கத்துவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்தையும் வழங்காமலேயே இவ்வளவு பெரிய அடிப்படைச் சம்பள உயர்வை நாங்கள் வழங்கினோம். அதுதான் இவர்களுக்கு இருக்கும் பிரச்சினை. எங்களுடன் பேசியிருந்தால் இது முடிந்திருக்கும். நாங்கள் அடையாளம் கண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம். வீதியில் இறங்கி யாரும் கத்தத் தேவையில்லை. யாரும் போராட்டங்களை நடத்தத் தேவையில்லை. நாங்கள் அடையாளம் கண்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அரசாங்கம் இது” எனத் தெரிவித்தார்.



