News

தும்பனே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ருவன் பிரதீப ஐக்கிய தேசிய கூட்டமைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி!

தும்பனே பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ருவன் பிரதீப, தமது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மஸீஹுதீன் நயீமுல்லாஹ் உள்ளிட்ட 14 கட்சி உயர்மட்ட உறுப்பினர்களுக்கும், தும்பனே பிரதேச சபையின் தெரிவத்தாட்சி அலுவலருக்கும் எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று (26) தள்ளுபடி செய்யப்பட்டது.

2025 மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் சார்பில் தும்பனே பிரதேச சபைக்குப் போட்டியிட்ட ருவன் பிரதீப, கட்சிக்குக் கிடைத்த இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றைச் சுழற்சி முறையில் ஒரு வருட காலத்திற்கு வகித்திருந்தார்.

அவருக்கான பதவிக்காலம் நிறைவடைந்த பின்னரும், கட்சியின் வேண்டுகோளுக்கிணங்க பதவியிலிருந்து விலக மறுத்ததால், கட்சியின் யாப்பு மற்றும் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவரது பிரதேச சபை உறுப்பினர் பதவி வெற்றிடமாக்கப்பட்டு, 2026 ஒக்டோபர் 2 ஆம் திகதி 2508/49 ஆம் இலக்க அரச வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது.

இதனைச் சவாலுக்கு உட்படுத்தி, தனது கட்சி உறுப்புரிமை நீக்கத்தைத் தடுத்து நிறுத்தும் இடைக்காலக் கட்டளையைக் கோரி அவர் இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மாவட்ட நீதிபதி ஜனக கெக்கிரிதெனிய முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட DSP/253/26 ஆம் இலக்க வழக்கில், பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி தினிகா டயஸின் நெறிப்படுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், சட்டத்தரணி ஷிபான் மஹ்ரூப் ஆகியோரும், சட்டத்தரணி ஷெஹாரா ஹங்ஸனியின் நெறிப்படுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி சிவானந்தராஜா அவர்களும் ஆஜராகினர்.

இதன்போது, மனுதாரரால் அரச அதிகாரியான தெரிவத்தாட்சி அலுவலர் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருப்பதால், சட்டமா அதிபரும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனவும், அதுபற்றி உரிய முன் அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கவேண்டியதன் அவசியத்தையும் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரச வர்த்தமானி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பதவி வெற்றிடத்தை ரத்துச் செய்யும் அதிகாரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு இல்லை என்றும், அதனைச் சவாலுக்கு உட்படுத்துவதற்கான உரிய சட்ட நடவடிக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதிவாதிகள் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு விடயங்களையும் பரிசீலித்த மாவட்ட நீதிமன்றம், மனுதாரரின் மனுவை நிராகரித்து, ஐக்கிய தேசிய கூட்டமைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பு, கட்சியின் யாப்பு மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

 

Recent Articles

Back to top button