News

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை பாராட்டுகிறேன்… ஆனால் அந்த நடவடிக்கையைத் தாண்டி அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் இல்லை ; சந்திரிக்கா

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார். இருப்பினும், அந்த நடவடிக்கையைத் தாண்டி அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் இல்லை எனவும், வர்க்க வெறுப்பைத் தூண்டுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
.
இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவ முன்முயற்சியின் ‘வோர்டெக்ஸ்’ (VORTEX) ஐந்தாவது தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
.
“தற்போதைய அரசாங்கத்திடமும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் இல்லை என்பதே எனது குற்றச்சாட்டாகும். ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மிகச் சிறந்தது, ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் இல்லை” என அவர் குறிப்பிட்டார்.
.
மற்றொரு வர்க்கத்திற்கு எதிராக வர்க்க வெறுப்பைத் தொடர்ந்து பரப்புவதைத் தவிர, அரசாங்கத்திடம் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் முன்னின்று செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்த குமாரதுங்க, அரசியல்வாதிகளோ அல்லது அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை காத்திருக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
.
“நீங்கள் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். பாராளுமன்றத்தில் உள்ளவர்களும், பல்வேறு கட்சிகளில் உள்ளவர்களும் தலைமைத்துவத்தை ஏற்பார்கள் எனக் காத்திருக்காதீர்கள்” எனக் கூறிய அவர், கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் எவ்வாறு கேட்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
.
சமத்துவமின்மையும், ஒருமித்த தேசத்தைக் கட்டியெழுப்பத் தவறியமையுமே இலங்கை தனது முழுமையான திறனை அடையத் தவறியமைக்கான அடிப்படைக் காரணங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
.
“நாம் இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு நாடு. அவற்றில் பல இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளன. கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புகள் காரணமாக எமக்கு மிக உயர்ந்த அளவில் விருத்தியடைந்த மனித வளம் உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் நாம் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். மிகச் சுருக்கமாகச் சொன்னால், எம்மால் ஒரு தேசமாக ஒன்றிணைய முடியாமல் போனதே இதற்குக் காரணம்” என அவர் கூறினார்.
.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் குறித்தும் கேள்வி எழுப்பிய குமாரதுங்க, கடந்த பாராளுமன்றம் ஒன்றில் சுமார் 20 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பட்டப்படிப்பைக் கொண்டிருந்ததாகவும், பெரும்பாலானோர் உயர்தரப் பரீட்சையைக் கூட பூர்த்தி செய்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
.
சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளுடன் மாத்திரம் நின்றுவிடாமல் அனைத்துப் பிரஜைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சமத்துவமின்மையே இலங்கை உண்மையான உன்னத நிலையை அடைவதைத் தடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button