டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் எதிரொலி – சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என SJB வேண்டுகோள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்கட்சி தலைவருக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள எரான் விக்கிரமரட்ண எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சில சக்திகள் தேர்தலை தாமதப்படுத்த முயல்வதால் எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியை கொலை செய்வதற்கான முயற்சி ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என அவர் கண்டித்துள்ளார்.
அரசியல்வாதிகள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள எரான் விக்கிரமரட்ண இலங்கையிலும் தங்களின் நிகழ்ச்சி நிரலை பூர்த்தி செய்ய முடியாதபோது சில கட்சிகள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றன என தெரிவித்துள்ளார்.
அவர்கள் கடந்த காலங்களில் வேட்பாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மீதான துப்பாக்கிப் பிரயோகம் குறித்த செய்தியை அறிந்ததும், நான் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவேண்டும் என அரசாங்கத்திடம் தெளிவாக தெரிவித்துள்ளேன் என எரான் விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயக நாடு பொது மக்களின் ஆணை மற்றும் தேர்தல்கள் மூலம் அரசியலை முன்னெடுக்கின்றது என தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே நான் அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன். சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு குறித்து எந்த சந்தேகங்களும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.