இஸ்ரேலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையைச் சேர்ந்த இரண்டு இலங்கையர்கள் காயமடைந்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனானின் அமைதிப்படையில் இருந்த இரண்டு இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
தெற்கு லெபனானில் உள்ள நகுராப பகுதியில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தவிடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சு, ஐக்கிய நாடுகள் பணியாளர்களின் பாதுகாப்புக்கான கடப்பாடுகளைச் சகல சந்தர்ப்பங்களிலும் இலங்கை உறுதிப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினர் மீது தாக்குதல் நடத்துவதனை இஸ்ரேல் படையினர் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இஸ்ரேலின் செயற்பாட்டைக் கண்டித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
எனினும் இந்தச் சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது

